பக்கம்:சோழர் வரலாறு.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
212
சோழர் வரலாறு
 


பெற்ற காலத் திற்றானே அவன் மகனான இராசேந்திரன் வயது வந்த இளைஞனாக இருத்தல் கூடியதே ஆம். அதனாற்றான் இராசராசன் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் (கி.பி. 988) ‘இராசேந்திர சோழ தேவன்’ குறிப்பிடப்பட்டுள்ளான்[1]. இராசராசன் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அரசாட்சி செய்துள்ளான். இராசேந்திரன் அந்தக் காலம் முழுவதும் தந்தையுடன் இருந்து பல போர்களில் ஈடுபட்டிருந்தான். எனவே, இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் ஏறத்தாழ 50 வயது உடையவனாக இருந்தானாதல் வேண்டும்.

சென்ற பகுதியிற் கூறப்பட்ட இராசராசன் ஆட்சியில் நடந்த போர்களில் எல்லாம் இளவரசனாக இருந்த இராசேந்திரற்குப் பங்குண்டு என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ? இராசேந்திரன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போர்த்திறத்திலும் அரசியலிலும் நன்கு பண்பட்டிருந்தான். இராசராசன் தன் ஒப்பற்ற மகனான இராசேந்திரனிடமே தனது முதுமைப்பருவத்தில் அரசியலை ஒப்புவித்தான். அவன் உயிருடன் இருந்தபோதே கி.பி.1912-இல் இராசேந்திரற்கு முடிசூட்டினான் என்பது ஐயமற விளங்குகிறது. என்னை? இராசராசன், தன் மகனான இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஒரு தேவதானம் கொடுத்தான் என்று திருமுக்கூடல் கல்வெட்டு[2] கூறுதலால் என்க.

நாட்டு நிலை : இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் (கி.பி. 1012-ல்)[3] சோழப்பேரரசு வடக்கே கிருஷ்ணை துங்கபத்திரை வரை பரவி இருந்தது. சோழநாடு போகப் புதிதாக வென்ற நாடுகளைத் திறமுற ஆள நம்பிக்கையுடைய அதிகாரிகள் இருந்தனர். சில


  1. விக்டோரியா அம்மையார்க்குப் பின்வந்த ஏழாம் எட்வர்ட் மன்னர் வயது இங்கு நினைவு கூர்தற்குரியது.
  2. 196 of 1917.
  3. Ep. Indica, Vol.8, p.260.