பக்கம்:சோழர் வரலாறு.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

சோழர் வரலாறு



செய்யாத பெரியதொரு அரசியல் நுட்பம் வாய்ந்த வேலை செய்தான்-சிறந்த அரசியல் அறிஞன் என்பதை மெய்ப்பித்துவிட்டது. இராசாதிராசன் முதல் மகனல்லன். இராசேந்திரன் அவனை இளவரசன் ஆக்கிப் பேரரசை ஆளும் பொறுப்பை ஒப்படைத்தான் எனின், இந்த இளவல் ஏனை மக்களினும் பல்லாற்றானும் சிறப்புப் பெற்றவனாக இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? இங்ஙனம் அவரவர் ஆற்றல் அறிந்து அவரவர்க்கேற்ற அரசப் பதவி அளித்த பெருமை இராசேந்திரன் ஒருவர்க்கே உரியதாகும், என்னல் மிகையாகாது. தென் இந்திய வரலாற்றிலே இது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

இளவல்-சுந்தரசோழன் : இராசேந்திரன் தன் மற்றொரு மகனான சுந்தரசோழன் என்பானைப்பாண்டிய நாட்டிற்குத் தலைவன் ஆக்கினான். இவ்விளவல் கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனப் படுகிறான். பாண்டிய நாட்டை ஆண்டதால் ‘பாண்டியன்’ எனப்பட்டான்; அப்பாண்டியர் சடாவர்வன், மாறவர்மன் என்பவற்றில் ஒன்றை வைத்திருந்ததைப் போலச் ‘சடாவர்மன்’ எனப் பெயர் தாங்கினான்; தனது இயற் பெயரான ‘சுந்தர சோழன்’ என்பதையும் கொண்டு விளங்கினான். இவ்விளவல் பின்னர்ச் சேர நாட்டையும் சேர்த்து ஆளும் உரிமை பெற்றான். அதனால், சோழ கேரளன் எனப்பட்டான். இங்ஙனம் இவ்விளவரசன் தன் தந்தை காலம் முழுவதும் சேர, பாண்டிய நாடுகளை ஆண்டுவந்தான்.

இங்ஙணம் மண்டலங்களை ஆண்டவர் தம் பேரரசன் மெய்ப்புகழைக் கூறியே தம் பெயரில் கல்வெட்டுகள் விடுதல் மரபு. ஆயின் ஆட்சி ஆண்டு அவரதாகவே இருக்கும். இராசேந்திரன் தன் மக்களிடமும் தன் நம்பிக்கைக்குரிய பிற அரசியல் தலைவர்களிடமுமே மண்டலம் ஆளும் பொறுப்பை விட்டிருந்தான். பேரரசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/216&oldid=491301" இலிருந்து மீள்விக்கப்பட்டது