பக்கம்:சோழர் வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

221


 இவன் கி.பி. 1024-25-இல் அவற்றை வென்றிருத்தல் வேண்டும். கடல்கடந்து சென்ற இம்முயற்சியில் இராசராசன், முதலில் கடாரத்து அரசனை வென்று அவனுடைய யானை, செல்வம், வித்தியாதரத் தோரணம் முதலியன கவர்ந்தான்; பின்னர்ப் பல நாடுகளையும் ஊர்களையும் பிடித்தான்; இறுதியிற் கடாரத்தையும் கைக்கொண்டான். இனி இவன் கொண்ட நாடுகளும் ஊர்களும் எவை என்பதைக் காண்போம்.

ஸ்ரீவிஷயம் : இது சுமத்ரா தீவில் உள்ள ‘பாலம்பாங்’ என்னும் மாகாணம் ஆகும். இது மலேயாத் தீவுகளில் வாணிகத் தொடர்பால் கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை சிறப்புற்று விளங்கியது. இதனைச் சீனர் ‘ஸ்ரீ விஜயம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதி கிழக்கு-மேற்கு வாணிக வழிகட்கு நடு இடமாக இருந்து, செழிப்புற்றது. ஸ்ரீ-திரு, விஷயம்-நாடு; திருநாடு என்பது பொருள்.

கடாரம் : இது, தென்திரைக் கடாரம் எனப்படலால், கடற்கரையைச் சேர்ந்த பகுதி என்பது விளங்கும். இது வட மொழியில் ‘கடாஹம்’ என்றும் தமிழில் ‘காழகம், கடாரம்’ எனவும் பட்டது. காழகம் என்பது பத்துப்பாட்டிற் காணப்படலால், சங்கத் தமிழர் நெடுங்காலமாகக் கடாரத்துடன் கடல்வழி வாணிகம் செய்துவந்தமை அறியலாம். சீனரும் நெடுங்காலமாக வாணிகம் செய்துவந்தனர். அவர்கள் எழுதி வைத்த குறிப்புகளால், மலேயா தீபகற்பத்தின் தென்பகுதியில் உள்ள ‘கெடா’ என்னும் இடமே ‘கடாரம்’ ஆதல் வேண்டும் என்பது தெரிகிறது. இதனை ஆண்டவன் ‘சங்கிராம விசயோத்துங்க வர்மன்’ என்பவன்[1]. மாயிருடிங்கம், இலங்காசோகம்,


  1. பர்மாவில் உள்ள ‘பெகு’ தான் ‘கடாரம்’ என்று பலர் கூறியது தவறு. அங்குக் கிடைத்த இரண்டு துண்கள் இராசேந்திரன் வெற்றித் தூண்கள் அல்ல. Wide A.R.B. 1919 & 1922.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/223&oldid=1233552" இலிருந்து மீள்விக்கப்பட்டது