பக்கம்:சோழர் வரலாறு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

227



இருந்தது.[1] அரண்மனை ஏவலாளர்தொகுதி ஒன்று இருந்தது. அதன் பெயர் ‘திருமஞ்சனத்தார் வேளம்’ என்பது. பெரிய கடைத்தெருவும் இருந்தது[2]. கோவிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மாளிகை மேடு எனப்படும் திடர் ஒன்று இருக்கிறது.அங்குதான் சோழரது அரண்மனை இருந்ததாம். அத்திடரின் அடியில் கட்டடத்தின் பகுதிகளும் அவற்றின் சின்னங்களும் காணப்படுகின்றன. அந்த இடம் அகழப் பெறுமாயின், பல குறிப்புகள் கிடைக்கலாம். ஏரியின் தென்கரை ஓரத்தில் சிற்றுரர் இருக்கிறது.அதன் பெயர் கங்கை கொண்ட (சோழ) புரம் என்பது. அதைச் சுற்றிக் காடு இருக்கிறது. அதற்கு அண்மையில் அழகிய பாழைடந்த கட்டடச் சிதைவுகள் பல காட்டிற்குள் இருக்கின்றன.இவை பழைய பாபிலோன் நகர அடையாளங்களாக இருந்த மேடுகளைப் போல இருக்கின்றன. இந்நகரம் செழிப்பாக இருந்த காலத்தில் சோழகங்கம் உதவிய நன்னீர் செய்த தொண்டு அளப்பரிதாக இருத்தல் வேண்டும்; இப்பொழுது காடாகக் கிடக்கும் பெரிய நிலப்பரப்பு அக் காலத்தில் பசுமைக் காட்சியைப் பரப்பி இருக்குமன்றோ?[3]

கங்கை கொண்ட சோழேச்சரம் : இது கங்கைகொண்ட சோழன் கட்டியதால் இப்பெயர் பெற்றது. இதன் அமைப்பு முழுவதும் இராசராசன் கட்டிய பெரிய கோவிலைப் போன்றதாகும். இஃது ஆறு கோபுரங்களைக் கொண்டிருந்தது இக்கோவில் பெரிய கோவிலைவிடச் சிறியதாக இருப்பினும், சிற்பவேலையில் அதைவிட மிகச் சிறந்தது. இச்சிறந்த கோவில் இப்பொழுது அழிந்து கிடக்கிறது. இதன் திருச்சுற்றுகள் காணப்படவில்லை. கோபுரங்களில் கீழைக்கோபுரம் ஒன்றே இப்பொழுது இடிந்த நிலையில் இருக்கின்றது. உள்ளறையும் அதைச் சுற்றியுள்ள திருச்சுவருமே இப்பொழுது ஒரளவு காணத்தக்க நிலையில் இருக்கின்றன.


  1. S.I.I. Vol. 2, No. 20.
  2. 102 of 1926.
  3. Ind. Ant. Vol. iv, p.274.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/229&oldid=491317" இலிருந்து மீள்விக்கப்பட்டது