பக்கம்:சோழர் வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

229



திருச்சுற்று : (திருச்சுற்றில் இன்று பல கோவில்கள் காண்கின்றன; சந்திரசேகரர் கோவில் அழிந்து கிடக்கிறது. இவை யனைத்தும் (சண்டீசர் சிறு கோவில் தவிர) பிற்பட்டவையே ஆகும். அம்மன் கோவில் பிற்காலத்தே உள்ளே கொணர்ந்து கட்டப்பெற்றதாகும்.) திருமதிலின் முன்புற மூலைகள் இரண்டிலும் பின்புறமதிலின் நடுப்பகுதியிலும் அரை வட்டமான ‘காவற்கூடம்’ போன்ற கட்டட அமைப்பு இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய குறிகள் காண்கின்றன.

உட்கோவிலுக்கு எதிரே முற்றும் செங்கற்களாலான பெரிய நந்தி ஒன்று படுத்துள்ளது. அதன் தலை வரை உயரம் 6 மீ. முதுகு வரை உயரம் 4 மீ. அதற்கு வலப்புறம் நேர் எதிரே சிங்கமுகக் கிணறு ஒன்று அற்புதமாக அமைந்துள்ளது. அருகில் உள்ள கிணற்றுக்குச் செல்லும் படிக்கட்டுகள் டகர வரிசையில் அமைந்துள்ளன. அப் படிக்கட்டுக்கு மேல் செங்கற்களாலான சிங்கம் காட்சி அளிக்கிறது. அதன் வயிற்றில் உள்ள வாசல் வழியே படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், பக்கத்தில் உள்ள கிணற்று நீரைக் காணலாம். ஏறத்தாழ 30 படிக்கட்டுகள் நீருள் இருக்கின்றனவாம்; நீருக்குமேல் 20 படிகள் உள. படிகள் அனைத்தும் கருங்கற்களே யாகும்.

உட்கோவில் : இதன் நீளம் 260 மீ., அகலம் 250மீ, இதனுள் மகா மண்டபம் 57மீ. நீளமும் 30 மீ. அகலமும் உடையது. இறை அறைக்கும் இம்மண்டபத்திற்கும் இடையே உள்ள அர்த்த மண்டபத்தின் இருபக்கங் களிலும் தெற்கிலும் வடக்கிலும் அழகிய திருவாயில்கள் படிகளுடன் உள்ளன. கோவிலை அணுகும் திருவாயில் கிழக்கே உள்ளது. மகா மண்டபத்தில், எட்டுப்பந்தி களாய் 140 கற்றுண்கள் அணி அணியாக உள்ளன. நடுப்பகுதி 6.மீ. உயரமுடையதாய், இரு பக்கங்களும் 5 மீ. உயரம் கொண்டனவாய் மேலே கல் கொண்டு மூடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/231&oldid=491319" இலிருந்து மீள்விக்கப்பட்டது