பக்கம்:சோழர் வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

235



வெள்ளாற்றிலிருந்து வந்தது. தெற்கும் வடக்கும் இருந்த இக்கால்வாய்கள் இரண்டு ஆறுகளிலிருந்தும் நீரைப் பெய்து வந்தமையால் ஏரி எப்பொழுதும் கடல் போலக் காட்சி அளித்தது. இக் கால்வாய்களின் கரைகள் இன்றும் காணக்கூடிய நிலையில் உள்ளன. இந்த ஏரி நீர் திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு கோட்டங்களுக்கு நீரை உதவியதாகும். இதன் பாய்ச்சலால் பயன் பெற்ற விளை நிலங்கள் பலவாகும். ஆனால் இன்று இந்தப் பெரிய ஏரி தன் பழைமையை மட்டுமே உணர்த்திக் கிடப்பது வருந்தற்குரியதே. இந்த ஏரி இப்பொழுது காடடர்ந்த இடமாகிவிட்டது. பிற்காலத்தில் படை எடுத்தவர் இதனைப் பாழாக்கினர் என்று ஒரு மரபு கூறப்படுகிறது.[1]

இந்த ஏரி இப்பொழுது புதுப்பிக்கப்படுகிறது; வேலை நடைபெற்று வருகிறது. இது தன் பண்டைய நிலை எய்துமாயின், நாடு செழிப்புறும்.

மலையோ, குன்றோ இல்லாத சமவெளியில் 26 கி.மீ. நீளம் பலமான கரை போடுதல், நீரைத் தேக்குதல், 100 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டி நீரைக் கொணர்தல் என்பன எளிதான செயல்கள் ஆகா. இவ்வரிய செயல்களைச் செய்து முடித்த இராசேந்திரன் நோக்கம், தன் குடிகள் நல்வாழ்வு வாழக் கண்டு, தான் இன்புறல் வேண்டும் என்பதொன்றே அன்றோ? இத்தகைய பேரரசனைப் பெற்ற தமிழ் நாடு பேறு பெற்றதே அன்றோ?

அரசன் விருதுகள் : இராசேந்திரன் விருதுப் பெயர்கள் பலவாகும். அவற்றுள் மருராந்தகன், உத்தம சோழன், விக்கிரமசோழன், வீரராசேந்திரன்[2] என்பன இவன் முன்னோர்க்கும் பின்னோர்க்கும் இருந்த பெயர்கள்.


  1. Ind Ant. IV. P. 274.
  2. 61 of 1914.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/237&oldid=491324" இலிருந்து மீள்விக்கப்பட்டது