பக்கம்:சோழர் வரலாறு.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

சோழர் வரலாறு



இவனுக்கே உரியவை முடிகொண்ட சோழன்[1], கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான், பண்டித சோழன்[2] என்பன.

அரச குடும்பம் : அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறையில் இருந்ததுபோலும் பழையாறை அக்காலத்தில் ‘முடிகொண்ட சோழம்’ எனப் பெயர் பெற்று இருந்தது. இராசேந்திரன் முதல் மனைவியான பஞ்சவன் மாதேவிக்கு அங்குப் பள்ளிப்படை அமைக்கப்பட்டது[3]. இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள் பஞ்சவன் மாதேவியார், திருபுவன மாதேவியார் எனப்பட்ட வானவன் மாதேவியார்[4]. முக்கோக்கிழான் அடிகள்[5]. வீர மாதேவியார் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். வீரமாதேவியார் இராசேந்திர னுடன் உடன்கட்டை ஏறினவர் ஆவர்[6]. இப் பேரரசர்க்குப் பிள்ளைகள் பலர் இருந்தனர். அவர் நமக்குத் தெரிந்தவரை இராசாதிராசன், இராசேந்திரதேவன், வீர ராசேந்திரன் என்போர் ஆவர். இம் மூவருள் சடாவர்மன் சுந்தர சோழன் ஒருவனா அல்லது வேறானவனா என்பது விளங்கவில்லை. பிரானார் எனப்படும் அருமொழி நங்கை ஒரு பெண்; அம்மங்கா தேவி ஒரு பெண். அருமொழி நங்கை இராசாதிராசன் ஆட்சி முற்பகுதியில் திருமழப்பாடிக் கோவிலுக்கு விலை உயர்ந்த முத்துக்குடை அளித்தி ருக்கிறாள்[7]. இராசராசன் மகளான குந்தவ்வைக்கும் சாளுக்கிய விமலாதித்தற்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பவன் இராசேந்திரன் மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே பிற்காலப் பேரரசனான முதற் குலோத்துங்கன்.


  1. காவிரியின் கிளையாறு ‘முடிகொண்டான்’ என்னும் பெயரை உடையது. அஃது இவனால் வெட்டப் பட்டது போலும்!
  2. S.I.I. Vol.3, No. 127.
  3. 271 of 1927.
  4. 624 of 1920.
  5. 73 of 1921.
  6. 260 of 1915.
  7. 71 of 1920.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/238&oldid=492603" இலிருந்து மீள்விக்கப்பட்டது