பக்கம்:சோழர் வரலாறு.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

237



இராசேந்திரன் தாய் வானவன் மாதேவி என்பவள். இராசேந்திரன் தாய்க்கு ஒரு படிமம் செய்தான்; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினான்; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான்[1]. இறந்தவரைக் கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தல் பெரிதும் வழக்கமில்லை. இந்த அம்மை சிறந்த சிவபக்தி உடையவளாய் இருந்தமையால், இவள் வடிவம் வழிபடப்பட்டது போலும்!

இராசராச விசயம் : இந்நூல் இராசராசனைப் பற்றியது போலும்; இந்நூல் விசேட காலங்களில் படிக்கப்பட்டது. இதனை அரசற்குப் படித்துக் காட்டியவன் நாராயணன் பட்டாதித்தன் என்பவன். அரசன் அவனுக்கு நிலம் அளித்துள்ளான்[2]. இந்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை. இஃது இருந்திருக்குமாயின், இராசராசன் வரலாற்றை விரிவாக அறிந்து இன்புறக் கூடுமன்றோ?

அரசன் ஆசிரியர் : இராசராசன் காலத்தில் பெரிய கோவிலில் சர்வசிவ பண்டிதர் இராசராசேந்திரன் பெரு மதிப்புக்கு உரியவராக இருந்தார். அவரும் அவருடைய சீடர்களும் எந்த நாட்டில் இருந்தபோதிலும் கொடுக்கும் படி ஆசாரிய போகமாக ஆண்டுதோறும் நெல் அளப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[3] லகுலீச பண்டிதர் என்பவர் மற்றோர் ஆசிரியர்[4]. அவர் சைவத்தின் ஒரு பிரிவாகிய காளாமுக சமயத்தைச் சேர்ந்தவர். இச்சமயத்தவர் பலர் பண்பட்ட பண்டிதராக அக்காலத்தில் விளங்கினர். அவர்களே சில அறநிலையங் களைப் பாதுகாத்து வந்தார்கள்.

பெளத்த விஹாரம் : இராசராசன் காலத்தில் நாகப் பட்டினத்தில் கட்டத்தொடங்கிய பெளத்த விஹாரம்


  1. 481 of 1925.
  2. 120 of 1931.
  3. S.I.I. Vol.2, No.20
  4. 271 of 1927.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/239&oldid=491325" இலிருந்து மீள்விக்கப்பட்டது