பக்கம்:சோழர் வரலாறு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

245



(2) கிருஷ்ணையாற்றின் இடக்கரையில் ‘பூண்டுர்’ என்னும் இடத்தில் கடும்போர் நடந்தது. அப்போரில் சோமேசுவரனுடைய சிற்றரசர் பலரும் பெண்டுகளும் சிறைப்பட்டனர். பூண்டுர் அழிக்கப்பட்டது; கழுதைகளைக் கொண்டு உழப்பட்டது; ‘மண்ணந்திப்பை’ என்ற இடத்திருந்த அரண்மனைக்குத் தீ வைக்கப்பட்டது; புலிக்கொடி பொறித்த வெற்றித் தூண் நடப்பட்டது[1].

கொப்பத்துப் போர் (கி.பி.1054): இராசாதிராசனுக்கும் ஆகவமல்லனான சோமேசுவரனுக்கும் கிருஷ்ணை யாற்றின் வலக்கரையில் ‘கொப்பம்’ என்னும் இடத்தில் கொடிய போர் நடந்தது. ‘கொப்பம்’ இப்பொழுதுள்ள ‘சித்ராபூர்’ என்பர். இருதிறத்தாரும் வன்மையுடன் போர் புரிந்தனர். பகைவர் அவனையே குறிபார்த்து அம்புகளை ஏவினர். அதிகம் அறைவதேன்? அவன் ஏறியிருந்த பட்டத்து யானை இறந்தது; பெருவீரனான இராசாதிராசன் பகைவர் அம்புகட்கு இலக்காகி இறந்தான். உடனே பகைவர் வெற்றி முழக்கத்துடன் முன் பாய்ந்தனர். நிலை கலங்கிய சோழவீரர் பின் பாய்ந்தனர். அந்த அலங்கோல நிலை மையைக் கண்டு பின் நின்ற இராசேந்திர சோழ தேவன் “அஞ்சேல், அஞ்சேல்” என்று கூவிக்கொண்டு முன் பாய்ந்தான்; சோழ வீரர் ஒன்று பட்டனர்; வீராவேசம் கொண்டனர்; பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் போர் புரிந்தனர். முன் போலவே சாளுக்கியர் இராசேந்திர சோழ தேவனை வீழ்த்தப் பல அம்புகளை எய்தனர். எனினும் பயனில்லை. சோழவேந்தன், சாளுக்கிய அரசன் உடன் பிறந்தானான ஜயசிம்மனையும், புலிகேசி, தசபன்மன், நன்னி நுளம்பன் முதலியோரையும் கொன்றான். பகைவனைச் சேர்ந்த சிற்றரசர் வன்னிரேவன், பெரும்படையுடைய


  1. 6 of 1890, 221 of 1894, 81 of 1895.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/247&oldid=492668" இலிருந்து மீள்விக்கப்பட்டது