பக்கம்:சோழர் வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

23



பெற்றனர்’ என்று தக்க சான்றுகளுடன் கூறத்தக்க வசதி இல்லை. சங்கச் செய்யுட்களைப் பலபட ஆராய்ந்து, அரசர் முறைவைப்பை அரும்பாடு பட்டு அமைக்க முயன்ற பலர் செய்துள்ள பிழைகள் பல ஆகும். ஆதலின், முடியாத இந்த வேலையை மேற்கொண்டு இடர் உறாமல், நன்றாகத் தெரிந்தவரைப் பற்றி மட்டும் விளக்கமாகக் கூறி, பிறரைச் சங்கச் செய்யுட்கள் கூறுமாறு கூறிச் ‘சங்ககாலச் சோழர் வரலாற்’றை ஒருவாறு எழுதி முடித்த நாவலர் பண்டிதர் நாட்டார் அவர்களும் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களும் நமது பாராட்டுக் குரியவரே ஆவர். தக்க சான்றுகள் கிடைக்கும்வரை, இப்பேரறிஞர் கொண்டுள்ள முறையே சிறந்ததாகும் என்பது சாத்திரீய ஆராய்ச்சி உணர்வுடையார்க்கு ஒப்ப முடிந்த ஒன்றாகும்.

நமது கடமை

சங்ககாலச் சோழ அரசருள் நடுநாயகமாக விளங்கியவன் கரிகாலன். அவன் காலத்தை ஏறக்குறைய ஒருவாறு முடிவு கட்டலாம். அவனைப்பற்றிக் கூறும் சங்கச் செய்யுட்களும் பிற்காலச் சோழர்காலத்துச் செய்யுட்களும் சில கல்வெட்டுகளும் இம்முயற்சியில் துணைசெய்யற்பாலன. பிற்காலச் சோழர் நூல்களிலும் கல்வெட்டுகளிலும் கரிகாலனைப் பற்றிக் கூறும் செய்திகள் பல சங்கச் செய்யுட்களில் இல்லை. இக்காரணம் கொண்டே வரலாற்றாசிரியர் சிலர் ‘அவை நம்பத்தக்கன அல்ல’ என உதறிவிட்டுக் கரிகாலன் வரலாற்றைக் கட்டி முடித்துள்ளனர். சங்க காலத்துச் செய்யுட்கள் அனைத்தும் நமக்குக் கிடைத்தில, பிற் காலத்தார் தொகுத்து வைத்தவையே ‘சங்க நூல்கள்’ எனப்படுவன. தொகுத்தார் கண்கட்கு அகப்படாத பழைய செய்யுட்கள் பல இருந்திருத்தல் இயலாதென்று யாங்வனம் கூறல் இயலும்? அப்பழைய பாடற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/25&oldid=480284" இலிருந்து மீள்விக்கப்பட்டது