பக்கம்:சோழர் வரலாறு.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

சோழர் வரலாறு


போர்கள்

சக்கரக் கோட்டம் : வீரராசேந்திரனது இறுதிக் காலத்தில் முதற் குலோத்துங்கன் பெரும் படையுடன் வேங்கிக்கு வடக்கே சென்றான்; நடு மாகாணத்திலுள்ள ‘வயிராகரம்’ என்ற ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரை எரியூட்டினான்[1]; தாரா வர்ஷனைப் போரில் வென்று தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான். ‘சக்கர கோட்டம்’ என்பது இப்பொழுது ‘சித்திரகூடம்’ என்பது. இது நடு மாகாணத்தில் ஜகதல்பூருக்கு மேற்கே 25 கல் தொலைவில் உள்ளது. குருஸ்பால் என்ற இடத்துக் கல்வெட்டு, ‘சக்கரகூடா தீசுவரனாம்...... தாராவர்ஷ நாமே நரேசுவரா’[2] என்று குறிப்பதால், தாராவர்ஷன் என்பவன் சக்கரக் கோட்டத்தரசனே என்றல் மெய்யாதல் காண்க.

சாளுக்கியருடன் போர் : இஃது ஆறாம் விக்கிரமாதித்தற்கும் முதற் குலோத்துங்கற்கும் நடந்த பேராகும். இது கி.பி. 1076-இல் நடந்தது - தன் மைத்துனனான அதிராசேந்திரன் கொல்லப்பட்டான், குலோத்துங்கன் சோழப்பேரரசன் ஆனான் என்பதைக் கேள்வியுற்ற விக்கிரமாதித்தன் கலங்கினான்; சோழப் பேரரசும் வேங்கி நாடும் ஒரே அரசன் ஆட்சிக்கு மாறியது, தனக்கு நன்மை யன்று என்பதை எண்ணிப் புழுங்கினான். அவ்வமயம் விக்கிரமாதித்தற்கும் அவன் தமையனான இரண்டாம் சோமேசுவரற்கும் மனத் தாங்கல் மிகுதிப்பட்டது. அதனால் விக்கிரமாதித்தன் கலியாணபுரத்தைவிட்டுத் தம்பியான ஜயசிம்மனுடன் வெளியேறினான்[1]. அதனால் இரட்டபாடி இரு பகுதிகள் ஆயின. ஒன்று சோமேசுவரனாலும் மற்றொன்று விக்கிரமாதித்தனாலும் ஆளப்பட இருந்தன. இப்பிரிவினை உணர்ந்த குலோத்துங்கன்


  1. 1.0 1.1 S.I.I. Vol.3, No. 68, K. Parani, K. 239.
  2. Ibid. No. 68 and Ep Ind. Vol. 9. pp, 161 and 179.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/254&oldid=1233582" இலிருந்து மீள்விக்கப்பட்டது