பக்கம்:சோழர் வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

சோழர் வரலாறு



பொலநருவாவைத் தாக்கிச் சோழர் படையை முறியடித்தான்; சோழர் சேனைத் தலைவனைப் பிடித்துக் கொன்றான். ஆனால், விரைவில் சோழநாட்டிலிருந்து பெருஞ் சோழர் சேனை ஒன்று ஈழ நாட்டை அடைந்தது. அநுராதபுரத்தண்டைப் பெரும்போர் நிகழ்ந்தது. விசயபாகு தெற்கு நோக்கி ஓடினான். அவ்வமயம் சோழர், விசயபாகுவைச் சேர்ந்தாருக்குள் கலகம் உண்டாக்கினர். ஆயின் திறம் படைத்த விசயபாகு கலகத்தை அடக்கிவிட்டான்; கலகத் தலைவரைச் சோழர்பால் விரட்டிவிட்டான்; பிறகு தம்பலகிராமம் சென்று அரண் ஒன்றைக் கட்டினான்; புதிய படைகளைத் தயாரித்தான்; இரண்டு பெரிய படைகளை இரண்டு பக்கங்களில் அனுப்பிச் சோழர் படைகளைத் தாக்கச் செய்தான். ஒரு படை அநுராதபுரத்தைத் தாக்கியது; மற்றொன்று பொல நருவாவைத் தாக்கியது; கடும்போருக்குப் பிறகு பொல நருவா வீழ்ச்சியுற்றது.அதுராதபுரமும் வீழ்ந்தது. அங்ஙனம், இராசராச சோழனால் ஏற்படுத்தப்பட்ட சோழ அரசு இலங்கையில் கி.பி. 1076-இல் வீழ்ச்சியுற்றது. விசயபாகு அநுராதபுரத்தில் முடி சூடிக்கொண்டான்; உடனே தன் முன்னோர் முறையைப் பின்பற்றிப் பெளத்த சமயத்தைப் போற்றி வளர்க்கலானான்.[1]

பாண்டி மண்டலம் : பாண்டியர் காலமெல்லாம் சோழர்க்குத் துன்பம் கொடுத்துக்கொண்டே வந்தவர். கி.பி. 1070-ல் பேரரசு நிலைகெட்ட பொழுது பாண்டிய நாட்டில் குழப்பம் மிகுதிப்பட்டது. முற்பட்ட சோழர் ஏற்படுத்தி இருந்த சட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் அமைப்பும் பாண்டிய நாட்டில் புறக்கணிக்கப் பட்டன. சேரநாடும் பாண்டிய நாட்டைப் பின்பற்றியது. இந்நிலையில், குலோத்துங்கன் மேலைச் சாளுக்கிய முதற்போரை முடித்துக்கொண்டு நாடு திரும்பினான்; தெற்கே இருந்த குழப்ப நிலையை உணர்ந்தான்; அவன்


  1. Mahavamsa, chap. 58
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/256&oldid=491869" இலிருந்து மீள்விக்கப்பட்டது