பக்கம்:சோழர் வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

255



இலங்கையைப் பற்றிக் கவலை கொள்ளவே இல்லை. என்னை? அது கடலுக்கு அப்பாற்பட்டதாதலின் என்க. பாண்டிய நாடோ சோழ நாட்டை அடுத்தது. அது தனிப்படுவது சோழப் பேரரசுக்கே தீமை விளைப்பதாகும். விடுதலை பெற்ற பாண்டியர் பழிக்குப் பழிவாங்கத் தவறார் என்பதை அவன் அறிந்தவன். ஆதலின், அவன் முதலில் பாண்டிய நாட்டை அடக்கப் புறப்பட்டான்.

பாண்டிய நாட்டுப் போர் : கடல் அலைபோன்ற குதிரைகளையும் கப்பல்களை ஒத்த கரிகளையும் தண்ணிரை ஒத்த காலாட் படைகளையும் குலோத்துங்கன் அனுப்பினான்; அப்படைசென்றது-வடகடல் தென்கடலை உண்ணச் சென்றது போல் இருந்தது; பாண்டியர் ஐவர் (கலகக்காரர்) சோழர் படைக்கஞ்சிக் காட்டிற்குள் புகுந்துகொண்டனர். சோழர்படை அக்காட்டை அழித்தது: பாண்டிய மண்டலத்தை வென்றது; நாற்புறமும் வெற்றித் தூண்களை நட்டது; பாண்டியர் ஐவரைக் கொடிய மலைக்காடுகளிற் புகுந்து ஒளியச்செய்தது; முத்துக் குளிக்கும் இடங்களையும் முத்தமிழ்ப் பொதியமலையையும் கைப்பற்றியது. இவ்வளப்பரிய வெற்றிக்கு மகிழ்ந்து குலோத்துங்கன் தன்படை வீரர்க்கும் பாண்டிய மண்டலத்தில் அங்கங்கு ஊர்களை நல்கிச் சிறப்புச் செய்தான்; கோட்டாற்றில் நிலைப்படை ஒன்றை நிறுத்தி விட்டான்[1].

குலோத்துங்கன் பாண்டியனை அழித்துச் சேரர் செருக்கை அடக்கி இருமுறை காந்தளூர்ச்சாலையில் கலமறுத்தான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது. குலோத்துங்கன் படை பாண்டியரை முறியடித்துச் சோழரை ஒடச் செய்தது; கடற்றுறைப் பட்டினமான சாலையும் விழிஞமும் கைப்பற்றியது, என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.


  1. S.I.I. Vol. 3, p. 147
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/257&oldid=491870" இலிருந்து மீள்விக்கப்பட்டது