பக்கம்:சோழர் வரலாறு.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
சோழர் வரலாறு
 

செய்திகளையும் சோழர் மரபினர் வழிவழியாகக் கூறிவந்த செய்திகளையும் உளங்கொண்டே சயங் கொண்டார் போன்ற பொறுப்பு வாய்ந்த புலவர்கள்’ தம் நூல்களில் பல செய்திகளைக் குறித்திருப்பர் என்றெண்ணுவதே ஏற்புடையது; அங்ஙனமே பிற்காலச் சோழர் தம் பட்டயங்களிற் குறித்தனர் எனக் கோடலே தக்கது. அங்ஙனம் தக்க சான்றுகளாக இருப்பவற்றை (அவை பிற்காலத்தன ஆயினும்) மட்டும் கொண்டு நேர்மையான வரலாறு கட்டலே நற்செயலாகும். இந்த நேரிய முறையைக் கொண்டு கரிகாலன் காலத்தைக் கண்டறிய முயன்ற திரு. T. G. ஆராவமுதன் அவர்கள் நமது பாராட்டிற்கு உரியர் ஆவர்.[1]


3. கரிகாற் பெருவளத்தான் காலம்

இன்றுள்ள சங்கச் செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள சோழருள் இமயம் சென்ற கரிகாலனுக்கு முற்பட்டவர் சிலர் உளர். பிற்பட்டவர் சிலர் உளர். ஆதலின், இப்பெரு வேந்தன் காலத்தை ஒருவாறு கண்டறிவோமாயின், அக்காலத்திற்கு முற்பட்ட சோழர் இன்னவர் பிற்பட்ட சோழர் இன்னவர் என்பது எளிதில் விளக்கமுறும். ஆதலின், இங்கு அதற்குரிய ஆராய்ச்சியை நிகழ்த்துவோம்.

கரிகாற்சோழன் இலங்கையை வென்று ஆண்டவன் என்று சங்க நூற்கள் குறியாவிடினும், கலிங்கத்துப்பரணி கூறுகின்றது. அவன் வடநாடு சென்று மீண்டமை தொகை நூற்பாக்கள் குறியாவிடினும், அவனுக்குப் பிற்பட்டதான சிலப்பதிகாரம் கூறுகின்றது. சேர அரசர் மகனாரான இளங்கோவடிகள் சோழ அரசரான கரிகாலனை நடவாத ஒன்றைக் கூறிப் புகழ்ந்தனர் என்று கோடல் பொருத்தமற்றது. அவர் அங்ஙனம் கூறவேண்டிய காரணம் ஒன்றுமே இல்லை. தமிழ் நாட்டிற்கே பெருமை


  1. Vide his ‘The Sangam Age’ 395-2