பக்கம்:சோழர் வரலாறு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

259



கொண்டவை. இப்பட்டயம் பெறக் கடாரத்திலிருந்து வந்தவர் இராச வித்தியாதர ஸ்ரீ சாமந்தன், அபிமநோத்துங்க சாமந்தன் என்பவராவர். இப்பட்டயம் பழையாறை (ஆயிரத்தளி)[1] அரண்மனையில் ‘காலிங்கராயன்’ என்னும் அரியணை மீது இருந்து அரசனால் விடுக்கப்பட்டது. வந்த பரிசுகள் அரண்மனைவாயிலில் நின்ற யானைகள் மீது அழகு செய்தன[2]. சுமத்ராவில் கிடைத்த கல்வெட்டு, ‘திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்’ என்னும் பெயர் கொண்ட சோணாட்டு வாணிகக் குழுவினர் இருந்தனர் என்பதை உணர்த்துகிறது. இக்குழுவின் பெயர் ‘நாற்றிசையும் உள்ள ஆயிரம் ஊர்களிலிருந்து சென்ற நூறு வணிகர்’ என்னும் பொருளைக் கொண்டது[3]. இக்குறிப்புகளால், குலோத்துங்கன் ஸ்ரீ விசய நாட்டுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான் என்பதும், நன்முறையில் கடல் வாணிகம் நடந்து வந்தது என்பதும் அறியக் கிடக்கின்றன அல்லவா?

வேங்கி நாடு : குலோத்துங்கன் சோணாட்டைச் சீர்ப்படுத்திக் கொண்டு இருந்தபொழுது கி.பி. 1072-3-ல் திரிபுரியை ஆண்ட ஹெய்ஹய அரசனான யசகர்ண தேவன் என்பவன் வேங்கிமீது படையெடுத்து வந்தான். அவன் தன் கல்வெட்டில், ‘வன்மை மிக்க ஆந்திர அரசனை வென்று திராக்ஷாராமத்தில்[4] உள்ள பீமேச்சுர தேவர்க்குப் பல அணிகலன்களைப் பரிசாகத் தந்தேன்’ என்று கூறியுள்ளான்[5]; இவன் குறித்த ஆந்திர அரசன் குலோத்துங்கன் சிற்றப்பனான ஏழாம் விசயாதித்தனே ஆவன். குலோத்துங்கன் ஆகான். யசகர்ணதேவன் வந்து


  1. ‘ஆகவமல்ல குலகாலபுரம்’ என்ற பெயரும் உண்டு.
  2. S.I.I. Vol, 3, p. 146
  3. K.A.N. Sastry's cholas', Vol. II, p. 30
  4. இது ‘தாக்ஷாராமம்’ என்று இருத்தலே பொருத்தமுடையது
  5. R.D. Banerji's, Haihayas of Tiripuri, p.57.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/261&oldid=1233585" இலிருந்து மீள்விக்கப்பட்டது