பக்கம்:சோழர் வரலாறு.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

261


வேங்கியை ஆண்ட இளவரசனான விக்கிரம சோழனுக்கும் தென் கலிங்க நாட்டு அரசனுக்கும் நிகழ்ந்ததாகும். இப்போரில் கொலநு (எல்லூர்)வை ஆண்ட தெலுங்க வீமன் (சிற்றரசன்) என்பவன் கலிங்க அரசற்கு உடந்தையாக இருந்தான்; ஆதலின், இருவரையும் விக்கிரமசோழன் ஒரே காலத்தில் எதிர்த்துப் போரிட வேண்டியவன் ஆனான். சோழப் பேரரசற்கு அடங்கிய பராக்கிரம பாண்டியன் வடக்கு நோக்கிச் சென்று விக்கிரம சோழற்கு உதவி புரிந்தான்[1]. இவ்விருவரும் நிகழ்த்திய போரில் தென் கலிங்கம் பிடிபட்டது. வீமன் சிறைப்பட்டான். தென் கலிங்கம் என்பது கோதாவரிக்கும் மகேந்திர மலைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியாகும்[2]. இப்பகுதி வேங்கி நாட்டைச் சேர்ந்திருந்ததேயாகும்[3]. இங்கிருந்த அரசன் சிறைப்பட்டு ஒடுங்கியதால் தென் கலிங்கம் அமைதியுற்ற நாடானது. கி.பி. 1098-இல் வெளிப்பட்ட குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் இப்பகுதியைச் சேர்ந்த சிம்மாசலத்திலும் திராக்ஷாராமத்திலும் கிடைத்துள்ளன.

இரண்டாம் கலிங்கப் போர் : இஃது ஏறக்குறைய கி.பி. 1111இல் நடந்தது இதைப் பற்றிக் குலோத்துங்கன் கல்வெட்டுகள் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணி மிக்க விரிவாக விளக்கியுள்ளது. முதலில் கல்வெட்டுகள் கூறுவதைக் காண்போம்: சோழர் படை வேங்கி நாட்டைக் கடந்தது; பகைவன் சோழர் படையைத் தடுக்க யானைப் படையை ஏவினான். அந்த யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. சோழர் படை கலிங்க நாட்டில் எரி பரப்பியது; கலிங்கப் படையில் சிறப்புற்றிருந்த வீரர்


  1. Travancore Archealogical Series, Vol. I, p.22
  2. Cunningham's Ancient Geography'. p.591.
  3. Ep. Ind. Vol. 6, p.335.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/263&oldid=1233590" இலிருந்து மீள்விக்கப்பட்டது