பக்கம்:சோழர் வரலாறு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

சோழர் வரலாறு



இதனால், வேங்கிநாடு வேறாகிவிட்டதை நன்குணரலாம் அன்றோ? ஆனால், வேங்கியிலும் திராக்ஷாராமம் முதலிய இடங்களிலும் விக்கிரமாதித்தனுடைய 45 முதல் 48 வரை உள்ள ஆட்சி ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் வேங்கி நாட்டில் இருந்த சிற்றரசர் பலருடையன. இவற்றுள் விக்கிரம ஆண்டும், விக்கிரமன் பேரரசிற்குத் தாங்கள் பணிந்தவர்கள் என்றும் அச்சிற்றரசர் குறிப்பிட்டுள்ளனர். கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனின் தண்டநாயகனான அனந்தப்பாலையன் என்பவன் வேங்கியை ஆண்டான் என்று கல்வெட்டொன்று. குறிக்கிறது[1]. கி.பி. 1120-இல் இவன் மனைவி பீமேசுவரர் கோவிலுக்களித்த தானத்தைக் குறிக்கும் கல்வெட்டில் விக்கிரம ஆண்டேகுறிக்கப்பட்டுள்ளது[2]. திராக்ஷாராமத்துக் கல்வெட்டுகள் கி.பி. 1132-3 வரை சாளுக்கிய-விக்கிரம ஆண்டுகளைக் குறிக்கின்றன. அனந்தபாலையன் உறவினன் ஒருவன் கிருஷ்ணைக் கோட்டத்தில் உள்ள ‘கொண்ட பல்லி’யைக் கி.பி. 1727-இல் ஆண்டுவந்தான்[3]. கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற்பட்ட நாட்டைக் ‘கொள்ளிப்பாக்கை’யின் அரசன் என்னும் பட்டத்துடன் நம்பிராசன் என்பவன் கி.பி. 1131-இல் ஆண்டுவந்தான்[4]. இதுகாறும் கூறிய சான்றுகளால், குலோத்துங்கன்பேரரசிற்கு உட்பட்டிருந்த அவனுக்கு உரிமையான வேங்கிநாடு, அவனது ஆட்சி இறுதியில் கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனால் கைப்பற்றப்பட்டது விளங்குகிறதன்றோ? இம்முடிவினால் விக்கிரமாதித்தன் முதலிற் கொண்ட (சோழ நாட்டையும் வேங்கியையும் வேறு பிரிக்க வேண்டும் என்ற) எண்ணமும் நிறைவேற்றிக் கொண்டான் என்பதும் தெளிவாகின்றது.

கங்கபாடி பிரிந்தது : மைசூரில் அஸ்ஸன், கடுர் கோட்டங்களையும் நாகமங்கல தாலுகாவையும் கொண்ட நிலப் பரப்பை முதலில் ஆண்டவர் ஹொய்சளர் என்னும்


  1. 819 of 1922
  2. 330 of 1893.
  3. 258 of 1905
  4. 266 of 1893.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/266&oldid=492437" இலிருந்து மீள்விக்கப்பட்டது