பக்கம்:சோழர் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

25



தந்த அச்செய்தியை அவர் தமிழர் அனைவர்க்கும் சிறப்புத் தரும் செய்தியாகக் கருதியே தமது பெருங் காவியத்தில் குறித்துள்ளார். எனவே, இலங்கைப் படையெடுப்புக்கும் வடநாட்டுப் படையெடுப்புக்கும் எற்றதான ஒரு காலத்தேதான் கரிகாலன் இருந்திருத்தல் வேண்டும். அப்பொருத்தமான காலம் கண்டறியப்படின், அதுவே ‘கரிகாலன் காலம்’ என்று நாம் ஒருவாறு உறுதி செய்யலாம்.

கரிகாலன் படையெடுப்பின் காலத்தை ஆராயப் புகுந்த திரு. ஆராவமுதன் என்பார், தமது நூலில் “கி.மு. 327 - கி.மு. 232-க்கு உட்பட்ட காலம் சந்திர குப்தன், பிந்து சாரன், அசோகன் ஆகிய மூவர் காலமாதலால், அக்காலத்தில் தமிழ்வேந்தர் வடநாடு சென்றிருத்தல் இயலாது. கி.மு. 184 முதல் கி.மு. 145 புஷ்பமித்திர சுங்காவின் காலம். கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் ஆந்திரர் ஆதிக்கம் வலுப்பெற்றிருந்த காலம். கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் இப்படையெடுப்பு நடந்திருக்கும் என்று திட்டமாகக் கூறல் இயலாது..... ஆதலின், தமிழ்வேந்தர் படையெடுத்த காலம் (1) அசோகனுக்குப் பிற்பட்ட மோரியர் (கி.மு. 232 - கி.மு. 184) காலமாகவோ, (2) புஷ்பமித்திர சுங்காவுக்குப் பிற்பட்ட (கி.மு.148 - கி.மு.27) காலமாகவோ (3) ஆந்திரம் வலிகுன்றிய கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கமாகவோ இருத்தல் வேண்டும்” என முடிவு கூறினர்.[1]

இவர் கூறிய மூன்றாம் காலம் சிறிது திருத்தம் பெறல் நலம். என்னை? கி.பி. 163-இல் இறந்த கெளதமீபுத்திர சதகர்ணியின் மகனான புலுமாயிக்குப் பின் வந்த ஆந்திர அரசர் வலியற்றவர் எனப்படுதலின்[2] என்க. எனவே தமிழரசர் படையெடுக்க வசதியாக இருந்த மூன்று


  1. Vide his ‘The Sangam age’, pp. 56,57.
  2. C.S. Srinivasacharia’s, A History of India p,49.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/27&oldid=480290" இலிருந்து மீள்விக்கப்பட்டது