பக்கம்:சோழர் வரலாறு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

275



நிபந்தங்கள் விடுத்துள்ளனர். எனவே குலோத்துங்கன் ஆட்சியில் எல்லாச் சமயங்களும் தத்தமக்குரிய சிறப்பைப் பெற்று வந்தன என்பது தெரியலாம். ஆயினும், அரசன் தன்னளவில் சிறந்த சிவபக்தனாகவே இருந்து வந்தான். தன்னைத் திருநீற்றுச் சோழன் என்று இவன் அழைத்துக் கொண்டமையே இவனது சிவநெறிப் பற்றை விளக்கப் போதியதன்றோ?

அரச குடும்பம்

மனைவியர் : குலோத்துங்க செப்புப் பட்டயங்கள், இவன் இராசேந்திரதேவன் மகளான மதுராந்தகியை மணந்தான் எனக் கூறுகின்றன. இவளுக்கு மக்கள் எழுவர் பிறந்தனர். இவர்கள் கி.பி.1017 முதல் வேங்கி இளவரசர் ஆயினர் என்பதைக் காணின், குலோத்துங்கன் கி.பி.1070இல் பட்டம் பெற்றதை எண்ணின், குலோத்துங்கன் ஏறத்தாழக் கி.பி.1060-இல் மதுராந்தகியை மணந்தான் என்னலாம். மதுராந்தகியே கோப்பெருந்தேவியாக இருந்தாள். அவள் புவன முழுதுடையாள், அவனிமுழுது டையாள் எனப்பட்டாள். அவள் தீனசிந்தாமணி என்னும் பெயரையும் உடையவள்.[1] அவள் குலோத்துங்கனது 30ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு இறந்தனள். அதனால், தியாகவல்லி என்பவள் பட்டத்தரசி ஆனாள். மற்றொரு மனைவி ஏழிசை வல்லபி. இவள் ‘ஏழ் உலகுடையாள்’ பற்றி ‘ஏழிசை வல்லபி’ எனப்பட்டாள் போலும்! பிற அரச மாதேவியருள் திரைலோக்கிய மாதேவி ஒருத்தியாவாள். இவள் தன் தாயான உமைநங்கையின் நல்ம் கருதி ஆர்ப்பாக்கம் கோவிலில் கி.பி.1072-இல் விளக்கு ஒன்று எரிய ஏற்பாடு செய்தாள்.[2] சோழன்-சோறுடையான் ஆன காடவன் மாதேவி என்பவள் ஒரு மனைவி. இவள் பல்லவர் குலப்பாவை.[3] திரிபுவன மாதேவி என்ற கம்பமாதேவி ஒரு மனைவி. இவள்


  1. S.I.I. Vol.3. No.72
  2. 138 of 1923
  3. 39 of 1921
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/277&oldid=492997" இலிருந்து மீள்விக்கப்பட்டது