பக்கம்:சோழர் வரலாறு.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

279



கங்கபாடி : கங்கபாடியின் கிழக்குப் பகுதி மட்டும் விக்கிரமன் நாட்டுடன் கலப்புண்டது. அஃது எப்போது கலந்தது, எவ்வாறு கலந்தது என்பன கூறக்கூடவில்லை. இவனது இரண்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று மைசூரில் உள்ள சுகட்டுரில் கிடைத்தது. அதனில், இவனது தானைத் தலைவன் ஒருவன் அங்கு ஒரு கோவில் கட்டியது குறிக்கப்பட்டுள்ளது[1]. கோலார்க் கோட்டத்தில் இவனது 10-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று கிடைத்தது. அங்கு ஒரு விமானம் கட்டப்பட்ட செய்தி அதனில் குறிக்கப்பட்டுள்ளது[2]. இவ்விரண்டு கல்வெட்டு களாலும் கங்கபாடியின் கிழக்குப் பகுதியேனும் சோழப் பெருநாட்டில் சேர்ந்திருத்தது என்பது அறியக்கிடத்தல் காண்க.

வெள்ளக் கொடுமை : விக்கிரம சோழன் காலத்தில் (ஆறாம் ஆட்சி ஆண்டில்) வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு கோட்டங்களிற் பெரும்பகுதி ஆற்று வெள்ளத்திற்கு இரையானது. இதனாற் சில இடங்களில் ஊர்ப் பொது நிலங்களை விற்று அரசாங்க வரி இறுக்கப்பட்டது. . திருவொற்றியூர், திருவதிகை முதலிய ஊர்களில் இருந்த சபைகள் இவ் விற்பனையில் ஈடுபட்டன[3]. வெள்ளக் கொடுமையால் தஞ்சாவூர்க் கோட்டத்தைச் சேர்ந்த கோவிலடிதுறக்கப்பட்டது; ‘காலம் பொல்லாதாய், நம்மூர் அழிந்து, குடி ஒடிப்போய்க் கிடந்தமையால்’ என்பது கல்வெட்டு[4]. இக் குறிப்புகளால் சோணாட்டில் விக்கிரமனது 6,7-ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெள்ளக் கொடுமை நிகழ்ந்தது என்பதை அறியலாம்.

அரசியல் : விக்கிரம சோழன் ஆட்சி சிறப்பாக அமைதியுடையதே ஆகும். அரசன், தன் முன்னோரைப்


  1. 175 of 1911
  2. 467 of 1911
  3. 87 of 1900, 30 of 1903
  4. 275 of 1901 (S.I.I. Vol.7, No.496
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/281&oldid=493006" இலிருந்து மீள்விக்கப்பட்டது