பக்கம்:சோழர் வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

சோழர் வரலாறு



ஆண்டுக் கல்வெட்டிலேயே பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன் எனப்பட்டான். ஆதலின், இவன் பட்டம் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டுவரை தில்லைத் திருப்பணியிற் பெரிதும் ஈடுபட்டிருந்தான் எனலாம். இப்பணி இவனது தந்தையான விக்கிரமசோழன் காலத்து முடிவடையாது இவன் காலத்து முடிவுற்றதோ-அன்றி இவன் தானாகவே இதை மேற்கொண்டு செய்தனனோ தெரியவில்லை.[1] இவன் செய்த கோவில் திருப்பணிகள் குலோத்துங்கன் உலாவிற் சிறப்புற விளக்கப் பட்டுள்ளன. குலோத்துங்கன் ஈடும் எடுப்பும் அற்ற தன் அரச மாதேவியுடன் தில்லை சென்று கூத்தப் பெருமான் திருக்கூத்தைத் தரிசித்து, தில்லை மண்டபத்தில் இருந்த வைணவக் கடவுளாகிய கோவிந்தராசரை அப்புறப்படுத்தி னான்; பல திருத்தங்களைச் செய்தான்: எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான்; தான் பிறந்த கயிலையை நினையாதிருக்க அதனினும் மேம்பட்ட முறையில் அம்மனுக்குத் திருமாளிகை அமைத்தான் கோவிலின் பல பகுதிகளும் நகரத்தில் குறிப்பிடத்தக்க சில இடங்களும் பொன் வேய்ந்தான்.[2]’ இச் செய்திகளே சுருக்கமாக இராசராச சோழன் உலா[3]விலும் தக்கயாகப் பரணி[4]யிலும் குறிக்கப்பட்டுள.இவன், சிதம்பரத்துப்பொன்னம்பல நாதர் திருவடிகளாகிய தாமரை மலர்களிலுள்ள வண்டு போன்றவன்; இவன் திருவாரூரில் உள்ள அப்பர், சுந்தரர், சம்பந்தர் படிமங்கட்குப் பூசை முதலியன நடக்கத் தானம் செய்துள்ளான்[5] என்று ஒரு கல்வெட்டுக் கூறலைக் கொண்டு, இவனது சிவபக்தியையும் மூவர் முதலிகளிடம் இவன் கொண்டிருந்த பெருமதிப்பையும் உணரலாம்.


  1. A.R.E. 1913, Part II, No. 34; 1927, Part II, No.24
  2. Ula lines 69- 116
  3. R. Ula lines 58-66
  4. T. Parani, KK, 777, 800-810
  5. S.I.I. iv 7
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/292&oldid=493947" இலிருந்து மீள்விக்கப்பட்டது