பக்கம்:சோழர் வரலாறு.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

சோழர் வரலாறு



தக்கார் பாதுகாவலில் விட்டுச் சோழப் பெருநாட்டு அரசியலை இரண்டு வருடகாலம் தானே கவனித்து வந்தான்; எதிரிலிப் பெருமாள் நான்கு வயதினன் ஆனதும், அவனுக்கு ‘இராசாதிராசன்’ என்ற பெயருடன் முடி சூட்டிச் சிறப்புச் செய்தான்; இக்குறிப்புகள் அனைத்தும் ‘பல்லவராயன் பேட்டைச் சாசன’த்தில் நன்கறியக் கிடக்கின்றன[1]. ஆனால் இதே பல்லவராயன் பேட்டைச் சாசனத்தையும் இராசராசன் ஆட்சி ஆண்டுகளையும் சோதித்த பிறர், ‘இராசாதிராசன் கி.பி. 1153-இல் இளவரசன் ஆனான்; இராசராசன் கி.பி.117 3-இல் இறந்தான். எனவே 8 முதல் 10 ஆண்டுகள் பேரரசனுடன் சிற்றரசன் பயிற்சி பெற்றான்’ எனக் கூறுகின்றனர்[2]. இஃது எங்ஙனமாயினும், இரண்டாம் இராசராசனுக்குப்பிறகு பட்டம்பெற்றவன் இரண்டாம் இராசாதிராசன் என்பதுமட்டும் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். இவனுக்கு கரிகாலன் என்ற பெயரும் உண்டு[3].

பாண்டி நாட்டுக் குழப்பம்: இராசாதிராசன் பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில், பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன். பராக்கிரம பாண்டியன் அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத்துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர் இலங்காபுரி என்பவன் தலைமையிற் சென்றனர். அவன் பாண்டிய நாட்டை அடைவதற்குள், குலசேகரன் பராக்கிரமனை ஒரு நகரத்தில் அகப்படுத்தி, அதனைமுற்றுகை இட்டான்; அப்பொழுது நடந்த போரில் பராக்கிரமன் கொல்லப்பட்டான். அவன் மகனான


  1. 433 of 1924, of R. Dikshitar’s Kulothunga chola III, p. 21-23, 152-163
  2. K.A.N. Sastry’s ‘Cholas; Vol. II, p. 87,96
  3. 129 of 1927, 263 of 1913.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/298&oldid=1234233" இலிருந்து மீள்விக்கப்பட்டது