பக்கம்:சோழர் வரலாறு.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

297



வீரபாண்டியன் மலை நாட்டுக்கு ஓடி ஒளிந்தான். குலசேகரன் பாண்டிய மன்னன் ஆனான்.

இலங்காபுரி : இதனை உணர்ந்த இலங்காபுரி குலசேகரனை வென்று பாண்டிய நாட்டை இறந்தவன் உறவினர்க்கு உரிமையாக்கத் துணிந்து, நாட்டினுள் நுழைந்தான், இராமேசுவரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த கோவிலை அழித்தான்; ‘குந்துகாலம்’ என்ற இடத்தைக் கைப்பற்றிக் கோட்டை ஒன்று கட்டி, அதற்குப் ‘பராக்கிரமபுரம்’ என்று தன் அரசன் பெயரிட்டான்; இச்செயல்களை அறிந்த குலசேகரன் இரண்டு படைத்தலைவரைப் பெரும் படையுடன் ஏவினன். அப்படைகள் தோல்வியுற்றன. அடுத்துப் பல இடங்களில் போர் நடந்தது. இலங்காபுரியே வெற்றி பெற்றான். இறுதியிற் குலசேகரன் கொங்கு நாட்டுப் படைகளையும் இறந்த பராக்கிரம பாண்டியனுடைய சிதைந்த படையையும் தன் படைகளையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு தானே போரிட முந்தினன்; ஆயினும், பாவம்’ அவன் படுதோல்வி அடைந்தான். இலங்காபுரி தென்பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பலப்படுத்தினான்; மலை நாடு புக்க வீரபாண்டியனை வரவழைத்து, இலங்கை அரசன் தந்த பரிசுகளை அளித்துப் பாண்டிய அரசனாக்கி வைத்தான்.வீரபாண்டியன் இலங்காபுரியின் உதவி பெற்றே நாட்டை ஆண்டு வந்தான். இலங்காபுரி பிற இடங்களை வென்று ‘கண்ட தேவன் மழவராயன்’ என்பவனையும், ‘மானவ சக்கரவர்த்தி’ என்பவனையும் ஆளுமாறு விடுத்தான்.

தன் நாடு பாழாவதைக் கண்டு வெகுண்ட குலசேகரன் மீட்டும் தன் படைகளைத் திரட்டிப் போருக்குப் புறப்பட்டான். இலங்காபுரியால் நாடாள விடப்பட்ட சிற்றரசரும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். உடனே வீரபாண்டியன் அரசு கட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/299&oldid=493119" இலிருந்து மீள்விக்கப்பட்டது