பக்கம்:சோழர் வரலாறு.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

சோழர் வரலாறு



முதற்குலோத்துங்கற்குப் பின் தோன்றி இராசாதிராசன் காலத்தில் வலுப்பெற்றது. பெருநாட்டிற்கு வெளியே ஈழத்தரசன் பாண்டி மண்டல அரசியலிற் புகுந்து குழப்பம் உண்டாக்கி வெற்றியும் தோல்வியும் கலந்து நுகர்ந்து வந்தான். தெலுங்கு நாட்டில் இருந்த சிற்றரசரும் தம் மனம் போனவாறு நடக்கத் தலைப்பட்டனர். இராசராசன், இராசாதிராசன் கல்வெட்டுகளே நெல்லூர்க்கு வடக்கே இல்லாததற்குக் காரணம் இதுவே ஆகும். அதற்கு வடக்கே சாளுக்கியப் பெருநாட்டை விழுங்கிக் காகதீயர் வன்மை பெற்று வந்தனர். மேலைச் சாளுக்கியர் ஒடுங்கிவிட்டதால், மைசூர்ப் பகுதியில் ஹொய்சளர் வன்மையுற்று அரசியல் செல்வாக்குப் பெறலாயினர்.இந்நிலைகளை நன்கு கவனித்த மூன்றாம் குலோத்துங்கன், முதலில் சோழப் பெருநாட்டில் அமைதியை உண்டாக்கிப் பலப்படுத்தத் துணிந்தான்.

போர்ச் செயல்கள்

படைகள் : சோழர் படைகள் திறம் வாய்ந்தவை. அவை முதற்பராந்தகன் காலமுதலே நல்ல பயிற்சிபெற்று வழி வழி வந்தவையாகும். இக்குலோத்துங்கன் காலத்தில் இருந்த யானைப்படை சிறப்புடையது. கி.பி.1178-இல் சீன ஆசிரியர் ஒருவர் சோணாட்டுப் படையைப்பற்றி இங்ஙனம் வரைந்துள்ளார் :-

“சோழர் அரசாங்கத்தில் 60 ஆயிரம் யானைகள் கொண்டபெரும்படை இருக்கிறது. ஒவ்வொரு யானையும் 2 அல்லது 3 மீ உயரம் உடையது. போர்க்களத்தில் இந்தக் கரிகள் மீது வீரர் பலர் செல்கின்றனர். அவர் கைகளில் ஈட்டி, வில், அம்பு முதலியன கொண்டுள்ளனர்; நெடுந்துரம் அம்பு எய்வதில் வல்லுநர். போரில் வெற்றி பெறும் யானைகட்குச் சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். அவற்றின் மீது சிறப்பை அறிவிக்க உயர்தரப் போர்வைகள் விரிக்கப்படும். நாள்தோறும் அரசன் திருமுன் யானைப் படை நிறுத்தப்படும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/308&oldid=1234311" இலிருந்து மீள்விக்கப்பட்டது