பக்கம்:சோழர் வரலாறு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

29



கரிகாலனைப் பாடியவர் கழாத் தலையார், வெண்ணிக் குயத்தியார், என்பவர், பரணர் காலத்தவரான கபிலர், கழாத் தலையார் தமக்குக் காலத்தால் முற்பட்டவர் என்று தெளிவுறக் கூறுகிறார். இவ்விரு புலவரும், பெருஞ்சேரல் ஆதன் அல்லது பெருந்தோள் ஆதன் என்பவனைக் கரிகாலன் தோற்கடித்த செய்தியைக் கூறியுள்ளனர். பெருஞ்சேரலாதன் புறப்புண் நாணி வடக்கு இருந்தான். அப்பொழுது அவனைக் கழாத் தலையார் பாடினர். வென்ற கரிகால் வளவனை வெண்ணிக் குயத்தியார் பாராட்டி யுள்ளனர்.

“இதுபோலவே வேறொரு ‘வெண்ணிப்போர்’ பொருநர் ஆற்றுப்படையுள் கூறப்பட்டுள்ளது. அதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார். அப்போர்கரிகாலனுக்கும் சேரன், சோழன் என்பார்க்கும் நடந்தது.போரில் கரிகாலன் அவ்விருவரையும் கொன்று வெற்றிபெற்றான். பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகாலனைப் பாராட்டிப் பாடப்பெற்ற நீண்ட அகவற்பா. அதனில், வெண்ணிப் போரில் மாண்ட சேரன் பெயரோ பாண்டியன் பெயரோ, குறிக்கப்படவில்லை. இப்போர், கழாத் தலையார் குறித்த போராக இருந்திருக்குமாயின், பாண்டியன் போர் செய்ததாக அவர் குறித்தல் வேண்டும். வெண்ணிக் குயத்தியாரும் பாண்டியனைப்பற்றி ஒன்றுமே குறித்திலர். இவ்விருவரும் குறித்த வெண்ணிப் போராக இஃது இருந்ததெனின் சேரன் புறப்புண் நாணி வடக்கிருந்ததை முடத்தாமக் கண்ணியார் குறித்திருத்தல் வேண்டும்.

“மேலும், வெண்ணிவாயிலில் நடந்த பெரும் போரில் கரிகாலன் வேந்தரையும் பதினொரு வேளிரையும் வென்றான் என்று பரணர் பாடியுள்ளார். அவரே பிறிதொரு செய்யுளில், “அரசர் ஒன்பதின்மர் ‘வாகை’ என்னும் இடத்தில் கரிகாலனோடு நடத்திய போரில் தோற்றனர்” என்று குறித்துள்ளார். இப்போர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/31&oldid=480323" இலிருந்து மீள்விக்கப்பட்டது