பக்கம்:சோழர் வரலாறு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

சோழர் வரலாறு


சேர நாட்டை அடைந்தான் சேரன் உதவியைப் பெற்று இழந்த நாட்டை மீட்க முயன்றான்; சிதறிக்கிடந்த தன் பழைய சேனையையும் திரட்டிச் சேரப் படையுடன் பாண்டி நாட்டிற்குள் நுழைந்தான்; இதனை அறிந்த குலோத்துங்கன் உருத்தெழுந்து தன் பெரும் படையுடன் சென்று நெட்டுரிற் பகைவனைச் சந்தித்தான். இருதிறப் படைகட்கும் போர் நடந்தது. முடிவென்ன? வீரபாண்டியன் தோற்றான்; அவன் படைவீரர் நாலாப் பக்கங்களிலும் ஒடலாயினர். அவனது முடி சோழன் கைப்பட்டது. அவன் கோப்பெருந்தேவியும் சிறைப்பட்டாள்.குலோத்துங்கன் அவனைத் தன் வேளத்திற்கு[1] அனுப்பிவிட்டான். வீரபாண்டியன் பொறுக்க இயலாத அவமானத்துடன் சேரநாட்டை அடைந்தான். சேரன் தான் பாண்டியனுக்கு உதவிபுரிந்த தவற்றை உணர்ந்து, வீரபாண்டியனுடன் வந்து குலோத்துங்கனைச் சரண் அடைந்தான். பெருந்தகையான குலோத்துங்கன் அவ்விருவரையும் அரசர்க்குரிய முறையில் வரவேற்றுச் சிறப்புச் செய்தான்;[2] வீரபாண்டியற்குப் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியை ஆள உரிமை அளித்து முடியும் ஈந்தான். வீரபாண்டியன் தான் ஈன்ற மைந்தற்குப் பரிதி குலபதி (சோழர்குலத் தலைவன்) என்ற குலோத்துங்கன் விருதுப் பெயரினை இட்டுச் சோழன் முன் நிறுத்த, குலோத்துங்கன் மகிழ்ந்து அவற்குச் சிறப்புப் பல செய்தான்.[3] இதுகாறும் கூறிய செய்திகள் இரண்டாம் பாண்டிப்போர் ஆகும். பாண்டியனது முடித்தலை கொண்ட களம் ஆதலின் மதுரை, ‘முடித்தலை கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது. இவ்விரு போர்களும் இவன் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகட்குள் நடந்தனவாகும்.


  1. ‘வேளம்’ என்பது அரண்மனையில் அரசரிடமும் அரசியரிடமும் இருந்த பணியாளர் படை. அரசியர்க்குப் பணிப்பெண்கள் படை’ உண்டு.
  2. 254 of 1925, 42 of 1906.
  3. S.I.I. Vol, 3, No.88
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/310&oldid=1234283" இலிருந்து மீள்விக்கப்பட்டது