பக்கம்:சோழர் வரலாறு.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

311


வந்ததாகக் கூறிக்கொள்கிறான்.[1] அதனால், அவன், குலோத்துங்கன் தென்னாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த போது, கச்சியைத் திடீரெனத் தாக்கிக் கைப்பற்றி இருக்கலாம். உடனே குலோத்துங்கன் வடக்கு நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றி இருக்கலாம். குலோத்துங்கன் இங்ஙனம் கி.பி.1196-இல் கச்சியைக் கைப்பற்றியதோடு நல்ல சித்தனது தனிப்போக்கையும் அடக்கி ஒடுக்கி இருக்க வேண்டும். என்னை? சித்தரசன் குலோத்துங்கன் ஆட்சி முழுவதிலும் அவனுக்கு அடங்கிய சிற்றரசனாகவே இருந்து வந்தனன் ஆதலின் என்க.

மூன்றாம் பாண்டிப் போர் : கி.பி. 1202-க்குச் சிறிது முன் குலோத்துங்கன் மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதாக இவனுடைய 26ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் குறிக்கிறது. இதன் விவரம் குடுமியான் மலைக்கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது:

குலோத்துங்கனால் சிறப்புப்பெற்ற விக்கிரம பாண்டியன் மகனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டி நாட்டைக் கி.பி. 1190 முதல் ஆண்டு வந்தான். இவன் சில ஆண்டுகளுக்குள் செருக்குற்றுச் சோழற்கு அடங்காமல் (தன் மனம் போனவாறு) நாட்டை ஆண்டுவந்தான் குலோத்துங்கற்கு மாறான செயல்களையும் செய்து வந்தான். அவனுடைய மெய்ப்புகழ்கள் அவன் வெறுப்புற்ற மனப்பான்மையை நன்கு உணர்த்துகின்றன.

குலசேகரன்செய்துவந்ததுரோகச்செயல்கள் சோழற்கு எட்டின. அவன் அரும்பாடுபட்டு அமைதி நிலவச் செய்த பாண்டிநாடு குலசேகரன் ஆட்சியால் பாழாவதை அறிந்து சீற்றங்கொண்டான் அவனைத் துரத்திவிட்டுப் பாண்டிய நாட்டைச் சோழர் அரசியற் பார்வையில் வைத்தலே நேர்மையானது எனத் துணிந்தான். உடனே பெரும் படையுடன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான்.


  1. 483 of 1906.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/313&oldid=1234287" இலிருந்து மீள்விக்கப்பட்டது