பக்கம்:சோழர் வரலாறு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

313



இவனது கோவை கூறுகிறது. இவனைப் பற்றிய புதுக் கோட்டைக் கல்வெட்டுகள் இரண்டும் இச்செய்தியைக் குறிக்கின்றன. ஆயின், அவ்விடங்களில் இவனது, கல்வெட்டு ஒன்றும் இல்லை. மேலும், காகதீயப் பேரரசனான கணபதி கி.பி.1799-இல் பட்டம் பெற்று, மேலைச் சாளுக்கியரை அடக்கிப் பெரு நாட்டை ஆண்டு வந்தான். அக்காலத்தில் சோழன் வடநாடு சென்று வெற்றி கொண்டான் என்பதற்கு வடநாட்டில் ஒரு கல்வெட்டும் சான்றில்லை. ஆதலின், இது புகழ்ச்சி மொழி எனக் கோடலே நன்று.[1] கம்பர் பெருமான் இக் குலோத்துங்கன் அவைப் புலவர் என்பது அறிஞர் ஒப்புக் கொண்டதே ஆகும். அவர் இச் சோழனிடம் மனம் வேறுபட்டவராய் ஓரங்கல்லைக் கோநகராகக் கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய முதற் பிரதாபருத்திரன் (கி.பி. 1162-1197) என்பவனிடம் சென்று தங்கியிருந்தார் என்பது உண்மை ஆயின் கம்பர் சோழற்குப் பகைவனான காகதீய அரசனிடம் சென்றிருந்தார் எனக் கோடலே பொருத்தமாகும். இது பொருத்தமாயின், சோழனுக்கும் பிரதாபருத்திரற்கும் பகைமை அல்லது பேரரசர் என்ற முறையில் பொறாமை இருந்திருத்தல் வேண்டுமன்றோ? பகைமை ஆயின், புதுக்கோட்டைக் கல்வெட்டுகளிற் குறித்த குலோத்துங்கன் செய்த வடநாட்டுப் போர்கள் உண்மையெனக் கோடவில் தவறில்லை அன்றோ? கோவையும் கல்வெட்டுகளும் சேர்ந்து கூறும் வடநாட்டுப் போர் ‘நடந்திராது’ என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. உண்மை மேலும் ஆராயற்பால தேயாம்.

சோழப் பெருநாடு : மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் வடக்கே நெல்லூர், கடப்பைக் கோட்டங்களிற் காண்கின்றன; தெற்கே திருநெல்வேலி முடியக் கிடைக்கின்றன; மேற்கே ஹேமாவதி, அவனி,


  1. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol.2, p.141-42
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/315&oldid=1234293" இலிருந்து மீள்விக்கப்பட்டது