பக்கம்:சோழர் வரலாறு.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

315


நந்தியராசர், வயிராதிராசர், வாணாதிராசர், காடவராயர், கொங்கராயர், சித்தரசர். விழிஞத்தரையர் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்கள் நடு அரசாங்கத்திற்கு வந்த வழக்குளை விசாரித்து வேண்டியன செய்தனர்[1]; சிற்றூர் அவைகள் செய்து வந்த வேலைகளைக் கண்காணித்து வேண்டியன செய்தனர்[2]. எனவே, நடு அரசாங்கம் இச் சோழன் காலத்தில் செம்மையாகப் பணி ஆற்றிவந்ததை நன்கறியலாம். இவனது 38-ஆம் ஆட்சி ஆண்டில் தஞ்சாவூரில் நிலம் அளக்கும் வேலை நடைபெற்றது[3]. அரசனுக்கு அந்தரங்கச் செயலாளராக இருந்து நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிவித்தும், அரசன் ஆணைபெற்றுச் செயலாற்றலை மேற்கொண்டும் இருந்தவருள் இராசநாராயண மூவேந்தவேளான், மீனவன் மூவேந்த வேளான், நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இங்கனம் திறமை பெற்ற அரசியல் உயர் அலுவலாளர் பலர் இருந்தமையால் பேரரசு நிலை தளராது நன்னிலையில் இருந்தது.

சிற்றரசர் :

மலையமான்கள் : இக் குலோத்துங்கன் காலத்தில் முன் பிருந்தவாறே சிற்றரசர் அனைவரும் இருந்துவந்தனர். இவருள் நெடுங்காலமாக வந்த மரபினர் சேதிராயர் என்ற மலையமான்கள் ஆவர். இவர்கள் சேதிராச மரபினர் என்று தம்மைக் கூறிக்கொண்டதால், ‘சேதிய ராயர்’ எனப்பட்டனர். இவர்கள் நடு மாகாணங்களில் இருந்த (சேதி நாட்டிலிருந்த) ஹெய் ஹெயர் மரபினர் என்று கூறிக்கொள்ள முயன்று இங்ஙணம் ‘சேதியராயர்’ எனக்கொண்டனர் போலும்! அந்தக் காலம், ஒவ்வொரு சிற்றரச மரபினரும் புராணத்துள் கூறப்பட்டுள்ள ஒரு மரபைச் சேர்ந்தவராகக் கூறிக்கொண்ட காலமாகும்[4].


  1. 83 of 1926
  2. 113 of 1928
  3. 188 of 1908
  4. K.A.N. Sastry's ‘Cholas,’ Vol.2. p.164
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/317&oldid=1234291" இலிருந்து மீள்விக்கப்பட்டது