பக்கம்:சோழர் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சோழர் வரலாறு



செய்திகள் பிற்காலக் கரிகாலனை (இமயம் சென்று மீண்ட கரிகாலனை)ப்பற்றிய நீண்ட பாக்களாகிய பொருநர் ஆற்றுப்படையிலும் பட்டினப்பாலையிலும் குறிப்பிடப்பட்டில. மேலும், சோழன் ஒரிடத்தில் பதினொரு வேளிருடனும் அரசருடனும், மற்றோர் இடத்தில் ஒன்பது அரசருடனும் போரிட வேண்டிய நிலைமை மிகவும் முற்பட்டதாகவே இருத்தல் வேண்டும் அன்றோ? சோழநாடு ஒரரசன் ஆட்சிக்கு உட்படாமல் - பல சிறு நாடுகளாகப் பிரிந்து பலர் ஆட்சியில் இருந்த காலத்திற்றான் இத்தகைய குழப்ப நிலைமை உண்டாதல் இயல்பு. பிற்காலக் கரிகாலன் பொதுவர், அருளாளர் என்பவருடனும் பாண்டியன் முதலியவருடனும் போர் செய்து வென்றதாகத்தான் பொருநர் ஆற்றுப்படை கூறுகிறது. பதினொரு வேளிர் ஒன்பது அரசர் என்பது நன்கு சிந்திக்கத்தக்க எண்கள் ஆகும். தொகை நூற் பாடல்களில் சோழர் என்னும் பன்மைச் சொல் பல இடங்களில் வருதலைக் காணலாம்; உறந்தை, வல்லம், குடந்தை, பருவூர், பெருந்துறை முதலிய பல இடங்களில் சோழ மரபினர் இருந்தனர் என்று தெரிகிறது. இக்குறிப்புகளால், தொடக்க காலமுதல் ஏறக்குறைய இரண்டாம் கரிகாலன் காலம் வரை சோழநாட்டில் சோழ மரபினர் பலர் பல இடங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர்; அவருள் மண்ணாசை கொண்ட ஒருவன் மற்றவரை வென்றடக்க முயன்றனன்.இதனால் பல இடங்களில் போர் நடந்தன என்பன ஒருவாறு அறியலாம். இம்மரபினருள் முதற் கரிகாலன் அழுந்துரை ஆண்ட சென்னி மரபினனாக இருக்கலாம்."

இந்நுட்பமான ஆராய்ச்சியால், இமயம் சென்ற கரிகாலன் இரண்டாம் கரிகாலன் என்பதும், வெண்ணிக் குயத்தியாரால் பாடப்பெற்றவன் முதற் கரிகாலன் என்பதும் அறியக்கிடத்தல் காண்க.[1] இதனால்,


  1. K.N.S. Pillai's ‘Chronology of the Early Tamils’, pp. 91-98.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/32&oldid=480324" இலிருந்து மீள்விக்கப்பட்டது