பக்கம்:சோழர் வரலாறு.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

சோழர் வரலாறு


வாங்குசிறை அன்னம் துயிலொழிய வண்டெழுப்பும்
பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்
ஒத்துலகம் தாங்கும் உயர்மேரு வைக்கொணர்ந்து
வைத்தனைய சோதி மணிமண்டபத் திருந்து
சோலை மலிபழனச் சோணாடும் தானிழந்த
மாலை முடியும் தரவருக என்றழைப்ப
மான நிலைகுலைய வாழ்நகரிக் கப்புறத்துப்
போன வளவன் உரிமையோ டும்புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேர்என்று முன்காட்டி
வெற்றி அரியணைக்கீழ் விருந்து தொழுதிரப்பத்
தன்னோடி முன்இகழ்ந்த தன்மையெலாம் கையகலத்
தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே
விட்ட புகலிடம்தன் மாளிகைக் குத்திரிய
விட்ட படிக்கென்றும் இதுபிடிபா டாகஎனப்
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்கும்
செங்கயல்கொண் டூன்றும் திருமுகமும் பண்டிழந்த
சோழபதி என்னும் நாமமும் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருணி”

ஹொய்சளர் உதவி : இக் கல்வெட்டுச் செய்தியால், பாண்டியன் பழிக்குப்பழி வாங்கினான் என்பதும், இராசராசன் நாட்டை மீளப் பெற்று ஆண்டான் என்பதும் நன்கு தெரிகின்றன. ஆயின், ஹொய்சள மன்னர் கல்வெட்டுகள் வேறு செய்தி ஒன்றைக் கூறுகின்றன. ஹொய்சள அரசனான இரண்டாம் வல்லாளன் தன்னைச் ‘சோழ ராச்சியப் பிரதிஷ்டாசாரியன்’ என்றும், ‘பாண்டிய யானைக்குச் சிங்கம்’ என்றும் கூறிக்கொள்கிறான். அதனுடன் அவன் மகனான நரசிம்மன் ‘சோழகுலக் காப்பாளன்’ என்று கூறப்பெறுகிறான். இக்கூற்றுகள் கி.பி. 1218-க்கு முற்பட்ட கல்வெட்டுகளில் காண்கின்றன. வேறொரு கல்வெட்டு, “பகைவர் இடையில் மறைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/338&oldid=493365" இலிருந்து மீள்விக்கப்பட்டது