பக்கம்:சோழர் வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342

சோழர் வரலாறு



இவர்கள் கையில் இருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் இதனைத் தெலுங்குச் சோழரிடமிருந்து மீட்டான். அவன் இறந்தவுடன் அது காடவர் கைப்பட்டது. அதனை நரசிம்ம ஹொய்சளன் கைப்பற்றினான். அதனால் ஹொய்சளர் நிலைப்படை அங்கு இருக்க வேண்டியதாயிற்று. நரசிம்மவர்மன் செல்வாக்கினால் ஹொய்சளர் பலர் காஞ்சி முதல் திருநெல்வேலிவரை பரவி இருந்தனர். விருத்தாசலம் கூற்றத்துத் திருவடத்துறைக் கோவில் திருமேனிகள் சில நரசிம்ம தேவன் கொண்டு சென்றனன் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.[1] பூததேய நாயகன், மகாப்பிரதானி அம்மண்ண தண்ட நாயகன், என்போர் காஞ்சியில் இருந்த படைத் தலைவர் ஆவர். இவர்கள் காஞ்சியில் உள்ள அத்திகிரி முதலிய கோவில்கட்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளனர்.[2] நரசிம்மனது மற்றொரு தண்ட நாயகன் வல்லயன் என்பான் திருமழப்பாடிக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்தான்.[3] நரசிம்மன் மனைவியான சோமளதேவியின் பரிவாரப் பெண்களில் ஒருத்தி திருக்கோகர்ணம் கோவிலுக்கு நிபந்தம் விடுத்தாள்.[4] இங்ஙனமே ஹொய்சள தண்டநாயகரும் பிறரும் பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; அரசியலிலும் தொடர்பு கொண்டிருந்தனர்.[5]

சோழப் பெருநாடு : இராசராசன் கல்வெட்டுகள் (130-ம் ஆண்டுவரை) சித்துார், நெல்லூர், கடப்பைக் கோட்டங்களிற் கிடைக்கின்றன. ஆதலின், சோழப் பெருநாடு கடப்பைவரை வடக்கே பரவி இருந்தது என்னலாம்.சேலத்தில் இவனுடைய கல்வெட்டுகள் இருக்கின்றன. ஆதலின் கொங்கு நாடும் பெருநாட்டிற்கலந்து இருந்தது என்னலாம். இவனது ஆட்சியில் பாண்டியநாடு தனிப்பட்டுவிட்டது. எனவே


  1. 228 of 1929
  2. 349,369, 404, 408 of 1919
  3. 89 of 1920
  4. 183 of p. Ins. 5.
  5. K.A.N. Sastry’s Pandyan Kingdom. pp. 158-159
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/344&oldid=1234338" இலிருந்து மீள்விக்கப்பட்டது