பக்கம்:சோழர் வரலாறு.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

சோழர் வரலாறு



செய்துள்ளனர். மலமாதேவரசன் என்பவன் சித்துரை ஆண்ட சிற்றரசன். தெலுங்கச் சோடருட் சிறந்தவனும் பேரரசனுமான முதல் திக்கன் என்ற கண்ட கோபாலன் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுளன். வானர், வைதும்பர், கங்கர், யாதவராயர், சாம்புவராயர், சேதியராயர் மரபினரும் வழக்கம்போலப் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுள்ளனர். எனவே, பெருங்காயம் இருந்த பாண்டம் மணம் வீசுதலைப் போல வலியற்ற இராசராசன் பெரு நாட்டில் சோழரது பழம் பெருமையை நினைத்தும் ஹொய்சளர்க்கு அஞ்சியும் இச்சிற்றரசர் தம்மைச் சோழருடைய சிற்றரசர் எனக் கூறிக்கொண்டனர்.

அரச குடும்பம் : இராசராசன் காலத்திற் சிறப்பாகக் குறிக்கப்பெற்ற அரண்மனை ஆயிரத்தளியே ஆகும். தஞ்சை, உறையூர்களில் இருந்த அரண்மனைகள் சுந்தர பாண்டியனால் அழிவுண்டன. ஆயிரத்தளியும் ஒரளவு பாதிக்கப்பட்டது. இவனுக்கு இரு மனைவியர் இருந்தனர். அவருள் ஒருத்தி கோப்பெருந்தேவி வாணகோவரையன் மகள் ஆவள். இளையவள் ‘புவனம் முழுதுடையாள்’ எனப்பட்டாள். இராசராசன் 30 ஆண்டுகள் அரசாண்டான். இதற்குப் பின் கி.பி. 1246-இல் மூன்றாம் இராசேந்திரன் அரசு கட்டில் ஏறினான். இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னி இருநான்கு திசை, சீர்மன்னு மலர்மகள்’ என்ற தொடக்கங்களை உடையன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/346&oldid=493374" இலிருந்து மீள்விக்கப்பட்டது