பக்கம்:சோழர் வரலாறு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

சோழர் வரலாறு


‘மாமன்’ ஆனான் என்பது விளங்கவில்லை. இவ்வுறவு எங்ஙனமாயினும், இவன் பாண்டியனை ஆதரித்து, இராசேந்திரனை வெறுத்து வந்தான் என்பது திண்ணம்.

சோமேசுவரன் தன் தண்ட நாயகரை ஏவிர் சோணாட்டைப் பிடிக்க முயன்றான் என்பது சில கல்வெட்டுகளால் தெரிகிறது. கி.பி.1241-இல் சிங்கண தண்ட நாயகன் என்பவன் சோணாட்டிற்குள் படையெடுத்து வந்தான். அப்பொழுது மூடப்பட்ட ஒரு கோவில் 50 ஆயிரம் காசுகள் செலவில் கும்பாபிடேகம் செய்யப்பட்டது என்று திருமறைக்காட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.[1] சோமேசுவரனது மற்றொரு தண்ட நாயகனான இரவிதேவன் என்பவன் கான நாட்டைக் கைப்பற்றினான் என்று புதுக்கோட்டைக் கல்வெட்டுக் குறிக்கிறது.[2]

பாண்டியர் - ஹொய்சளர் உறவு : கி.பி. 1238 - இல் பட்டம் பெற்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் வலியற்ற அரசன். இவன் கி.பி.149-இல் திருநெல்வேலிக் கோட்டத்தில் தன் மாமனான வீரசோமேசுவரன் பெயரை அவன் விருப்பப்படி ஒரு சிற்றுார்க்கு இட்டு வழங்கினான்; அதே ஆண்டில், வரக்கண்ண தண்டநாயகன் என்ற சேனைத் தலைவன் திருநெல்வேலியில் இருந்து வந்தான்.அக்காலத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமய்யத்தைச் சுற்றியுள்ள நாடு ‘கான நாடு எனப்பெயர் பெற்றிருந்தது.அது பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது. அங்குச் சைவ வைணவச் சண்டை உண்டாகி நாடு குழப்பப்பட்டதால், சோமேசுவரனது தண்ட நாயகனான அப்பண்ணன் என்பவனால் அமைதி உண்டாக்கப்பட்டது, பாண்டிய அரசன் மைத்துனன் ஹொய்சள இளவரசன். அவன் பெயர் விக்கிரம சோழதேவன் என்பது. அவன் பாண்டிய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவனாக இருந்தான்.[3]


  1. 501 of 1904.
  2. 387 of 1906.
  3. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom’, Page 158.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/348&oldid=493204" இலிருந்து மீள்விக்கப்பட்டது