பக்கம்:சோழர் வரலாறு.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

சோழர் வரலாறு



கூடுமாயின், சடாவர்மனை அடக்கி விடலாம் என்பது அவனது எண்ணம்.இங்ஙனம் உண்டான புதிய நட்பினால், சோணாட்டில் ஹொய்சள அரசியல் அலுவலாளர் பலர் வந்து தங்கினர்; சோழ அரசியலிற் பங்கு கொண்டனர்; கோவில் சம்பந்தமான வழக்குகளை விசாரித்தனர்.[1] இந்த இரு நாடுகட்கும் உண்டான நட்பு சோமேசுவரன் இறந்த பிறகும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1295-இல் ஹொய்சளத் தென்நாட்டை ஆண்ட இராமநாதன் 10,15ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெளியிட்ட இரண்டு கல்வெட்டுகள் திருச்சோற்றுத் துறையில் காண்கின்றன.[2]

பாண்டியன் பேரரசு : சடாவர்மன் சுந்தர பாண்டியன் ஏறத்தாழக் கி.பி. 1256, 57-இல் பெரும் படையுடன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்; சோழநாட்டைக் கைப்பற்றி இராசேந்திரனைத் தனக்கு அடங்கிய சிற்றரசன் ஆக்கினான்; அவனுக்கு உதவியாக வந்த வீரசோமேசு வரனை வென்று துரத்தினான். சோமேசுவரன் மீட்டும் கி.பி. 1254-இல் போருக்கு எழுந்தான்; போர் கண்ணனூர்[3] என்ற இடத்தில் நடந்தது. அப்போரில் சோமேசுவரன் கொல்லப்பட்டான். பின்னர் இப்பாண்டியன் பல்லவ மரபினனான கோப்பெருஞ்சிங்கன் அனுப்பிய கப்பத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவனது கோநகரமாகிய சேந்த மங்கலத்தை முற்றுகை இட்டான்; அந்நகரையும் பிற பொருள்களையும் கைப்பற்றினான்; அவற்றை அவர்க்கே தந்து. தன்கீழ் அடங்கிய சிற்றரசனாக இருக்குமாறு செய்து வடக்கு நோக்கிச் சென்றான்; வாணர்க்குரிய மகதநாட்டை யும் கொங்கு நாட்டையும் கைப்பற்றிக் கண்டகோ பாலனைப்போரிற் கொன்று, நெல்லூரில் ‘வீராபிடேகம்’ செய்துகொண்டான், காஞ்சியைத் தன் பேரரசின்


  1. 498 of 1902. 387 of 1903, 49 of 1913, 349 of 1919.
  2. 207, 208 of 1931.
  3. இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பம்’ - Vide S pandarathar’s Pandyar vara Iaru p.51.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/352&oldid=493208" இலிருந்து மீள்விக்கப்பட்டது