பக்கம்:சோழர் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44
சோழர் வரலாறு
 


தமது கருத்துநிறைவேறப் பெறாமல், தமிழகம் விட்டு மீண்டிருத்தல் வேண்டும். இச்சென்னி பகைவரை எதிர்த்திராவிடின், தமிழகம் மோரியர்க்கு அடிமைப் பட்டிருக்கும். தமிழகத்தின் படை வலிமையையும் இயற்கை அமைப்பையும் பிறவற்றையும் அறியாத வடநாட்டினர் ஆதலின், மோரியர், துளுவநாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று, பிறகு வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடு அடைந்து திதியனிடம் தோல்வியுற்றுப் பல இடங்களில் வழி தெரியாது திரிந்து மீண்டும் சோணாடு புக்கு முறியடிக்கப்பட்டனர்.

இப்படையெடுப்பு மோரியர்க்கு வெற்றியைத் தராமையாலும், தமிழகம் தன்னாட்சி பெற்றே அசோகன் காலத்தும் விளங்கினமையாலும், இளஞ்சேட்சென்னி யால் மோரியர் தோற்கடிக்கப்பட்டனர் என்னும் புலவர் கூற்றுகள் உண்மை என்றே புலப்படுகின்றன. இப்படையெடுப்புச் செய்தியில் சேரர், பாண்டியர் பெயர்கள் காணப்படவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டினனான காரவேலன் தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்து வந்த தமிழரசர் கூட்டமைப்பை அழித்ததாகக் கூறிக் கொள்கிறான். இதனை நோக்க, மோரியர் படையெடுப்புக்குப் பின் தமிழரசர் ஒன்றுபட்டு வடவரை எதிர்த்தனர் என்பது தெரிகிறது.

பிற்கால ஆரியர், கோசர், வடுகர்

கோசர், வடுகர், மோரியர் சம்பந்தப்பட்ட செய்யுட்களை ஒருங்கு கூட்டி நல்லுணர்ச்சியோடு நுணுகி ஆராய்பவர் ஒருவாறு மேற்கூறப் பெற்ற முடிவுக்கே வருதல் கூடும். இப்படையெடுப்பில் தொடர்பற்ற பிற்கால ஆரியர், கோசர், வடுகர் என்று தமிழ்ப்பாக்களில் குறிக்கப் பெற்றவர் வேறு. கி.மு.232-இல் அசோகன் இறப்ப, அவனுக்குப் பின் வந்த சாதவாகனர்