பக்கம்:சோழர் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

சோழர் வரலாறு



இருந்தான். அவன் ஒரு நாள் கோவிலுக்குத் தேரூர்ந்து சென்ற பொழுது பசுங்கன்று ஒன்று திடீரெனப் பாய்ந்தோடித் தேர்க்காலில் அகப்பட்டு இறந்தது. இதனை அறிந்த தாய்ப்பசு ஆராய்ச்சி மணியைத் தன் கொம்புகளால் அசைத்து அரசர்க்குத் தன் குறையை அறிவித்தது. நிகழ்ந்ததை அறிந்த சோழ மன்னன், தன் மைந்தனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தித் தான் தேரூர்ந்து சென்றான். பிறகு இறைவன் அருளால் கன்றும் மைந்தனும் பிழைத்ததாகப் பெரிய புராணம் புகல்கிறது.[1]

இலங்கை வரலாறு

இலங்கை வரலாறு கூறும் மகாவம்சம் பின்வரும் சுவைதரத்தக்க செய்தியைச் செப்புகிறது:-

“கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் உயர்குடிப் பிறந்த சோணாட்டான் ஒருவன் ஈழத்திற்கு வந்தான். அப்பொழுது இலங்கை அரசனாக இருந்தவன் ‘அசேலன்’ என்பவன். வந்த சோணாட்டான் படையொடு வந்தான் ஆதலின் எளிதில் ஈழத்தரசனை வென்று, 45 ஆண்டுகள் ஈழ நாட்டை ஆண்டான்: அவன் பெயர் ஏழாரன்'[2] என்பது. அவ்வரசன் பகைவர்க்கும் நண்பர்க்கும் ஒரு படித்தாகவே நீதி வழங்கினான். தன் மகன் தேர் ஊர்ந்து சென்று அறியாது பசுங்கன்றைக்


  1. இஃது இப்படியே கல்வெட்டிலும் காணப்படுகிறது;- Vide. I.I. Vol 5, No.436.
  2. ஏழாரன் ஏழ் + ஆரன் ஏழுமாலைகளை அணிந்தவன் எனப்பொருள் படலாம், ‘மும்முடிச் சோழன்’ என்றாற்போல் ஏழு அரசரை வென்றமைக்கு அடையாளமாக ஏழு மாலைகளை அணிந்தனனோ? அல்லது வள்ளுவர் வரலாற்றில் இணைப்புண்ட ‘ஏலேலன்’ என்ற பெயர் இங்ங்னம் பாலி மொழியில் திரிபுண்டதோ?
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/48&oldid=480450" இலிருந்து மீள்விக்கப்பட்டது