பக்கம்:சோழர் வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

47



கொன்றதாக அத்தனி மகனைக் கிடத்தி, அவன்மீது தானே தேர் ஊர்ந்து கொன்ற உத்தமன். அப்பேரரசன் பெளத்த சமயத்தினன் அல்லன்; ஆயினும், பெளத்தத் துறவிகளிடம் பேரன்பு காட்டி வந்தான். அவனது அரசாட்சி குடிகட்கு உகந்ததாகவே இருந்தது. அவன் ஆண்ட பகுதி இலங்கையின் வடபகுதியே ஆகும். பின்னர் இலங்கை அரசனான துத்தகாமனி என்பவன் ஏழாரனைப் - போரில் வென்று தமிழ் அரசைத் தொலைத்தான்; ஏழாரனைத் துரத்திச் சென்று அநுராதபுரத்தில் எதிர்த்தான். அங்கு நடந்த போரில் ஏழாரன் இறந்தான். தமிழர் சமயக் கொள்கைகள் இலங்கையிற் பரவாமலிருக்கவும் தூய பெளத்தமதத்தைக் காக்கவுமே துத்தகாமனி ஏழாரனை எதிர்த்து வெற்றி பெற்றான். இங்ஙனம் வெற்றி பெற்ற இலங்கை இறைவன் ஏழாரனுக்குரிய இறுதிக் கடன்களைச் செய்து முடித்தான்; அவன் இறந்த இடத்தில் நினைவுக்குறி எழுப்பி, வழிபாடு நடைபெறச் செய்தான். பின்வந்த ஈழத்தரசரும் அந்த இடத்தை அடைந்த பொழுதெல்லாம் இசை ஒலியை நிறுத்தி அமைதியாக வழிபட்டுச் செல்லல் மரபாகும்.[1]

சோழன் பெயர் யாது?

செயற்கரிய இச்செயலைச் செய்த சோழன் பெயரை, இச்செயலைப் பாராட்டிக் கூறும் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய பழைய நூல்கள் கூறாது விட்டன. கி.பி. 11, 12 - ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், சேக்கிழார் ஆகிய புலவர்கள் இவனை ‘மநு’ நீதிச் சோழன் என்றே கூறிப் போந்தனர். ‘மநு’ மநுநீதி, மநுநூல் என்னும் பெயர்கள் சங்க நூல்களிற் காணுமாறில்லை. பிற்காலத்து நிகண்டுகளிற்றாம் இப்பெயர்கள் காணப்படுகின்றன.


  1. 1. Geiger's Mahavamsa, Chap. 21-25.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/49&oldid=480451" இலிருந்து மீள்விக்கப்பட்டது