பக்கம்:சோழர் வரலாறு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

55



மாக விளங்கினான். அப்பொழுது உறையூரை ஆண்ட இவன் பெரிய தந்தை இறந்தனன்; தந்தையும் இறந்தனன். இறந்த அரசன் மைந்தன் பட்டம் பெற முனைந்தனனே, அன்றி யாது நடந்ததோ தெரியவில்லை; நாட்டிற் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரினின்றும் வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிவானாயினன். நாட்டில் இருந்த நல்லறிஞர் பண்டைக்கால வழக்கம் போலக் கழுமலத்து[குறிப்பு 1] இருந்த யானையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசுக்கு உரியவனைக் கொண்டு வருமாறு ஏவினான். அந்த யானை பல இடங்களில் அலைந்து திரிந்து, கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது எடுத்துக் கொண்டு உறையூரை அடைந்தது. அது கண்ட பெருமக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தவராய்க் கரிகாலனைச் சோழ அரசன் ஆக்கினர்.

பின்னர் யாது நடந்ததென்பது விளங்கவில்லை. தாயத்தார் இவன் மீது அழுக்காறுற்று இவனைப் பிடித்து சிறைக் கூடத்தில் அடைத்தனர்;[குறிப்பு 2] அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்த அவர் சிறைக் கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனாகிய கரிகாலன் எவ்வாறோ தப்பி வெளிப்போந்தான். தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் என்ற நல்லிசைப் புலவர் துணைப்பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாட்படைஞரைப் புறங்கண்டு, தாயத்தாரை ஒழித்து, அரசுரிமையைக் கைக் கொண்டு அரியணை அமர்ந்தான்.[குறிப்பு 3]

இவன் எரிந்து கொண்டிருந்த சிறைக்கூடத்திலிருந்து வெளிப்பட்ட போது இவன் கால் கரிந்து விட்டதால்


  1. கழுமலம் - சீகாழி. அங்கு யானை கட்டப்பட்டிருந்த இடம் இன்றும் இருக்கிறது.
  2. இப்பழக்கம், மூர்த்தி நாயனார் புராணத்தால் பாண்டியநாட்டிலும் இருந்ததென்பதை உணரலாம்.
  3. சந்திரகுப்த மோரியன் நந்தரால் சிறையில் இடப்பெற்றமை இங்குக் கருதத்தகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/57&oldid=480470" இலிருந்து மீள்விக்கப்பட்டது