பக்கம்:சோழர் வரலாறு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

சோழர் வரலாறு



கரிகாற் சோழற்கே சாரும். இவன் தான் வென்ற தொண்டை நாட்டைத் திருத்தினான். காடுகளை வெட்டி, மக்கள் உறைதற்கேற்ற சிற்றுார்கள் ஆக்கினான்; அவர்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்கள் ஆக்கினான். தொண்டை நாட்டை 4 கோட்டங்களாக அமைத்தான். அவையாவன: 1. ஆம்பூர் 2. இளங்காடு 3. ஈக்காடு 4.மணவில் 5. ஊற்றுக்காடு 6. எயில் 7. கடிகை 8. கலியூர் 9.களத்துார் 10. குன்றவட்டானம் 11. சேத்துர் 12. செங்காடு 13. செந்திருக்கை 14. செம்பூர் 15. தாமல் 16. படுவூர் 17.பல்குன்றம் 18. புழல் 19. புலியூர் 20. பையூர் 21.வெண்குன்றம் 22, வேங்கடம் 23. மணவூர் 24, வேலூர்.[குறிப்பு 1]

தொண்டை மண்டலத்தின் தலைநகரம் காஞ்சிபுரம், கரிகாலன் அதனை மதிலால் வளைப்பித்துச் சிறப்பித்தான் அங்குப் பலரைக் குடியேற்றினான்;[1] தொண்டை நாட்டை ஆண்டுவருமாறு தன் மரபினன் ஒருவனை (இளந்திரையன்?) விட்டுத் தன் நாடு மீண்டான்.

சோணாடு: சோழநாடு என்றும் சோற்றுக்குப் பஞ்சமின்றி இருக்கச் செய்தவன் இவ்வளவனே. இவன் ‘செவிலித்தாய் என்ன ஒம்பும் தீம்புனற் கன்னி’ யாற்றுப் பெருக்கால் உண்டாகும் தீமையை மாற்ற உளங் கொண்டான்; ஆற்றின் இருமருங்கும் கரை அமைக்க முடிவு செய்தான். உடனே காவிரியாறு எந்தெந்த ஊர் வழிச் செல்கிறதோ, அவ்வூர் அரசர்க்கெல்லாம் கரை கட்டுமாறு திருமுகம் போக்கினான்; அத்துடன் அவரவர் பங்கையும் அளந்து கொடுத்தான். இக்கட்டளைப்படி சிற்றரசர் அனைவரும் இலங்கையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஐம்பதாயிரம் மக்களும் முயன்று கரை அமைத்தனர். கரை அமைப்பு வேலை முடிந்தபின்,


  1. இவற்றைக் குறும்பரே அமைத்தனர் எனக் கூறலும் உண்டு.
  1. திருக்குறிப்புத் தொண்டர் புராணம்; செ 85.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/62&oldid=480583" இலிருந்து மீள்விக்கப்பட்டது