பக்கம்:சோழர் வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சோழர் வரலாறு



அஃதுணர்ந்த இவன் முதியவன் வேடங்கொண்டு வழக்கைக் கேட்டு நேரிய தீர்ப்புக் கூறினனாம். அம்முதியவர் மனங்களிப்புற்றனர். உடனே அவன் தன் பொய் வேடத்தை அவர் முன் நீக்க, அவர்கள் இவனது பேராற்றலைக் கண்டு வியந்தனர், அதே சமயம் இவனது திறமையை ஐயுற்றமைக்கு நாணினராம். இச்செய்தி பழமொழி, முதலிய நூல்களில் குறிக்கப் பெற்றுள்ளது.

கடல் வாணிகம்: இம்மன்னன் காலத்தில் கடல் வாணிகம் சிறப்புற நடந்து வந்ததென்னலாம். பூம்புகார்ப் பட்டினத்தை வளப்படுத்திய பெருமை இவனைச் சார்ந்ததே ஆகும். அந்நகரில் பலபாடை மக்கள் கடல் வாணிகத்தின் பொருட்டுத் தங்கியிருந்தனர் என்பதை நோக்கக் கடல் வாணிகம், உயர்ந்த முறையில் நடைபெற்றதை நன்குணரலாம். புகார் நகர் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்தது. காவிரியின் இருமருங்கும் பூம்புகார் அமைந்திருந்தது. அவ்வாற்றில் மரக்கலங்கள் சென்று மீளத் தக்கவாறு ஆழ்ந்து அகன்ற துறைமுகம் இருந்தது. கடற்கரை ஓரம் கலங்கரை விளக்கம் இருந்தது; இறக்குமதியாகும் பண்டங்களைத் தீர்வை வரையறுத்துக் கடமை (custom) கொள்ளும் ஆயத்துறை (Custom House) கள் இருந்தன; பிறகு அப்பண்டங்கட்குச் சோழனது புலி இலச்சினை இட்டு, அவற்றை இட்டு வைக்கும் பண்டசாலைகள் (ware-house), கிடங்குகள் (godowns), உயர்ந்த மேடைகள் (Docks and Piers)இருந்தன. இறக்குமதியான பொருள்கட்குக் கணக்கில்லை. அவற்றின் விவரம் யாவும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், ஊர்காண் காதை உரை இவற்றிற் கண்டு தெளிக: விரிப்பிற் பெருகும். இக்குறிப்புகள் அனைத்துடனும், கீழ்க்கரை ஓரம் கிடைத்துள்ள ரோம நாணயங்களையும், சாதவாகனர் நாணயங்களையும் நோக்க - வெளிநாட்டு உள்நாட்டு வாணிகம் நடந்து வந்த உயர் நிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/64&oldid=480630" இலிருந்து மீள்விக்கப்பட்டது