பக்கம்:சோழர் வரலாறு.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
69
 


நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தில் முடி கவித்துக் கொண்டு சோழப் பேரரசன் ஆனதும், உறையூர்க்கு ஒடி, அதனைத் தனதாக்கிக் கொண்டான்; கொண்டு, சூள் உரைத்துப் போருக்குப் புறப்பட்டான்.[1]

சூள் உரை: மெல்ல வந்து எனது நல்ல அடியை அடைந்து, ‘எமக்கு ஈய வேண்டும்’ என்று தாழ்ந்து இரப்பாராயின், அவர்க்குச் சிறப்புடைய முரசு பொருந்திய பழையதாய் வருகின்ற உரிமையையுடைய எனது அரசாட்சியைக் கொடுத்து விடுவேன்; இனிய உயிரை வேண்டுமாயினும் கொடுப்பேன். என் அமைச்சர் படைத் தலைவர் முதலியோர் வலிமையை உணராது என்னை இகழ்ந்து அறிவில்லாதவன், யாவர்க்கும் விளங்கத் துங்குகின்ற புலியை இடறின குருடன் போலப் பிழைத்துப் போதல் அரிதாகும். மூங்கிலைத் தின்னும் வலியையுடைய யானையினது காலின் கண் அகப்பட்ட வலிய மூங்கிலது நீண்ட முனையை ஒப்ப மேற்சென்று பொருவேன்; யான் அங்ஙனம் செய்யேனாயின், பொதுமகளிர் போகத்தில் எனது மாலை துவள்வதாக”

ஆவூர் முற்றுகை : இங்கனம் வஞ்சினம் உரைத்து நெடுங்கிள்ளியது ஆவூர்க் கோட்டையை முற்றுகை இட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே அமைதியாக இருந்து வந்தான்; வெளியே நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். கோட்டைக்கு வெளியே இருந்த நாட்டுப் புறங்கள் அல்லலுற்றன; போரால் துன்புற்றன. இக்கொடுமையையும், தாயத்தார் அறியாமையாற் செய்யும் கேட்டினையும் கண்டு இரங்கிய கோவூர் கிழார் என்னும் புலவர் கோட்டைக்குள் இருந்த நெடுங்கிள்ளியைப் பார்த்து, அறிவுரை பகர்ந்தார்.


  1. அகம் 73.