பக்கம்:சோழர் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

75


 மாக்களே,”[1] என்று பஞ்சிலரைப் புரவலன் பால் அழைக்கும் கோவூர்கிழார் பாடல் இவனது வள்ளன் மையை விளக்கப் போதுமன்றோ?

புலவர் அறவுரை: போரில் சிறந்த நலங்கிள்ளிக்கு முதுகண்ணன் சாத்தனார் அளித்த அறவுரை சாலச் சிறந்ததாகும். அதன் சுருக்கம் பின்வருமாறு:

“என் இறைவ, சேட்சென்னி நலங்கிள்ளி, உலகில் தோன்றி மறைந்த மன்னர் பலராவர். அவருள் உரையும் பாட்டும் உடையோர் சிலரே. வளர்ந்தது குறைதலும், குறைந்தது வளர்தலும், பிறந்தது இறத்தலும், இறந்தது பிறத்தலும் கல்வியால் அறியப்படாத மடவோரையும் அறியக் காட்டி அறிவை ஊட்டி வரும் புலவரை என்றும் காப்பாயாக. நீ நல்ல வளநாட்டிற்குத் தலைவன். ஆதலால், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் நீ பெற்று வாழ்வாயாக நினது நாளோலக்கம் நின்னைத் தேடி வரும் பாண் மக்களால் சூழ்வதாகுக, பிறகு நினது மார்பம் நின் உரிமை மகளிர் தோள் சூழ்வதாகுக: நின் அரண்மனை முற்றத்தில் முரசு அதிரத் தீயோரை ஒறுத்து. நல்லோரை அருள் செய்து வரும் முறையை இனியும் கடைப்பிடிப் பாயாக. 'நல்வினை நலம் பயக்கும் தீவினை தீமை பயக்கும்’ என்பதை மறுப்பவர் உறவை நீ நாடா தொழிவாயாக நின்னை நாடிவரும் எளியார்க்கு உதவி செய்யும் இயல்பு என்றும் நின்பால் நிலைப்பதாக, நீ பாதுகாத்த பொருள் நின் புகழிடத்ததாக”

இப்புலவர் பெருமான் பொன்மொழிகள் அவன் உள்ளத்தை உருக்கின. இவரே அன்றிக் கோவூர் கிழாரும் முற்றுகையிட்ட காலங்களில் எல்லாம் அறிவுரை கூறித் தெருட்டியுள்ளமை மேலே கூறப் பெற்றது. நற்குணங்கள் ஒருங்கே பெற்ற நலங்கிள்ளி, இப் பெருமக்கள் அறிவுரைப்படி நடந்து வந்தான் என்று நாம் எண்ணுவதில் பிழை ஒன்றும் இல்லை.

  1. புறம் 32.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/77&oldid=480676" இலிருந்து மீள்விக்கப்பட்டது