பக்கம்:சோழர் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

சோழர் வரலாறு



அக்காலச் செய்திகள் சில : ‘ஞாயிற்றினது வீதியும் அந்த ஞாயிற்றின் இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார்வட்டமும் காற்று இயங்கும் திக்கும், ஒர் ஆதாரமும் இன்றித்தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவரைப் போல நாளும் இத்துணை அளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையவரும் உளர்.’[1] ........ இக்கூற்றால், அக்காலத்தில் விண்ணுரல் அறிஞர் இருந்தனர் என்பதை அறியலாம். நாளும் தம் கல்வியை வளர்த்து வந்த பேரறிஞர் இருந்தனர் என்பதை உணரலாம்.

‘கூம்புடனே மேல் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல் அதன் மேல் பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தைப் பரதவரும், அளவரும் முதலாகிய தகுதி இல்லாதோர் தம் புலத்திற்கு இடையாகிய பெருவழிக்கண்னே சொரியும் கடலால் வரும் பல பண்டத்தையுடைய நாட்டை உடையாய்!’[2] ............ இதனால், நலங்கிள்ளியின் காலத்தில் நடந்து வந்த கடல் வாணிகம் இத்தன்மைத்தென்பதை ஒருவாறு அறியலாம் அன்றோ?

‘கைவல்லோனால் புனைந்து செய்யப்பட்ட, எழுதிய, அழகு பொருந்திய அல்லிப்பாவை ‘அல்லியம்’ என்னும் கூத்தை ஆடும்’[3] ..... இதனால், ஒவியக்கலை சோணாட்டில் இருந்து வந்தமை அறியலாம், கூத்து வகைகள் பல இருந்தன; அவற்றில் அல்லியம் என்பது ஒன்று என்பதும் அறிந்தின்புறலாம்.

‘பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும்’[4] என்பதனால், நலங்கிள்ளி அரசியல் பொறுப்பை அழுத்தமாக உணர்ந்த செங்கோல் அரசன் என்பது செவ்விதின் விளங்கும் அன்றோ?


  1. புறம் 30.
  2. புறம்
  3. புறம் 33.
  4. புறம் 400.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/78&oldid=480819" இலிருந்து மீள்விக்கப்பட்டது