பக்கம்:சோழர் வரலாறு.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
77
 


தம்பி மாவளத்தான்: இவனைப்பற்றி விவரமாக ஒன்றும் தெரியவில்லை. இவன் தாமப்பல் கண்ணனார் என்ற புலவரை ஆதரித்த வள்ளல், ஒருநாள் இவன் அவரோடு வட்டாடினான். அவன் கைகரப்ப, இவன் வெகுண்டான்; வட்டை அவர்மீது வீசி எறிந்தான். உடனே அவர் வெகுண்டு,‘நீ சோழன் மரபினன் அல்லை; அம்மரபில் வந்திருப்பின் நீ இங்ஙணம் செய்யாய்’ எனக்கடிந்தனர். அதுகேட்ட மாவளத்தான் தான் சினத்திற் செய்த சிறு செயலை எண்ணி வருந்தி நாணி நின்றான். அவனது உள்ள நிலையை நன்கு உணர்ந்த புலவர், தாம் அவனை வெகுண்டு கூறியதற்கு வருந்தி, அவனைத் தேற்றி மகிழ்வித்தார். இந்நிகழ்ச்சியை அப்புலவரே அழகாகப் பாடியுள்ளார்.[1]


9. கிள்ளி வளவன்

முன்னுரை: இவன் முன்சொன்ன நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியவர்க்கு அடுத்து இருந்த பெரிய அரசன் ஆவன். என்னை? அவ்விருவரையும் பாடிய புலவர் பலரும் இவனை நேரிற் பாடியிருத்தலின் என்க. இவன் உறையூரை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்டவன்.[2] இவனைப் புலவர் ஒன்பதின்மர் 18 பாக்களிற் பாடியுள்ளனர். இவனை அகநானூற்றில் ஒர் இடத்தில் நக்கீரர் குறித்துள்ளார்.[3] இவனைப் பற்றிய பாடல்களால் இவன் சிறந்த போர் வீரன், சிறந்த புலவன், புலவரைப் பற்றிய புரவலன், கரிகாலன் நலங்கிள்ளி போன்ற சோழப் பேரரசன் என்பன எளிதிற் புலனாகின்றன.

போர்ச் செயல்கள்: இவன் செய்த போர்கள் பல என்பது பல பாடல்களால் விளங்குகிறது.இடம் குறிக்காமலே பல பாடல்கள் போர்களைக் குறிக்கின்றன; இவன் பகைவர் அரண்கள் பலவற்றை அழித்தவன்; அரசர் பொன்


  1. புறம், 43.
  2. புறம், 69.
  3. அகம், 346.