பக்கம்:சோழர் வரலாறு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சோழர் வரலாறு



பின்னும் புலவர் பாடல்கள் கொண்டான். அவன் இறந்தபின் இவனைப் பாடியவர், மேற்குறித்த ஒன்பதின்மருள் நால்வர் ஆவர். அவர் கோவூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் என்போராவர்.

இரவலர்க்கு எளியன்: ‘பானனே, நீ கிள்ளிவளவனது கொடிய வாயிலில் காலம் பார்த்து நிற்க வேண்டுவதில்லை; உடனே உள்ளே போகலாம்’[1] என்று ஆலத்துார் கிழார் பாணனை ஆற்றுப்படுத்தலைக் காண, சோழனது இரவலர்க்கு எளியனாந்தன்மை இற்றென இனிது விளங்குகிறதன்றோ? ‘கலிங்கமும் (ஆடையும்) செல்வமும் கேடின்றி (குறைவின்றி)க் கொடுப்பாயாக; பெரும, நின் நல்லிசை நினைந்து இங்கு வந்தேன்; நின் பீடுகெழு நோன்றாள் பலவாறு பாடுவேன்”[2] என்ற நல் இறையனார் பாடலில், இவனது நல்லிசை அவரை வருமாறு செய்தது என்பதை நோக்குக. இதனால், இவனது வள்ளற்றன்மையும் இரவலர்க்கு எளியனாத் தன்மையும் நன்கு விளங்குகின்றன. இவன் வந்த புலவர்க்கு,

“நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
மணிக்கலம் நிறைந்த மணனாறு தேறல்
பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
மாரியன்ன வண்மையிற் சொரிந்து
வேனில் அன்னஎன் வெப்பு நீங்க
அருங்கலம் நல்கி யோனே”[3]

என்பது எருக்காட்டுர்த் தாயங் கண்ணனார் பாடலால் இனிதுணர க் கிடத்தல் காண்க.

புலவர் கையறு நிலை: இப்பெருமகன் அரசனாக இருந்து, பல போர்கள் புரிந்து, புலவர் பலரைப் போற்றி, எளியர் பலரை ஆதரித்து, முத்தமிழை ஒம்பி வளர்த்தமை


  1. புறம் 69
  2. புறம், 393
  3. புறம் 397
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/86&oldid=481189" இலிருந்து மீள்விக்கப்பட்டது