பக்கம்:சோழர் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
86
சோழர் வரலாறு
 


ஊர் காப்பார் இடையாமத்தில் விளக்கு எடுத்துக் கொண்டு ஊர் சுற்றிவருவது வழக்கம்[1] வரகரிசியைப் பாலிற் பெய்து அட்டசோற்றுடன் முயற் கறியை உண்டலும் அக்கால வழக்கம்.[2] இலக்கண முறைமை நிரம்பிய யாழைப் பாணர் வைத்திருந்தனர். அது தேன்போன்ற இனிய நரம்புத் தொடைகளை உடையது.[3] அரசர் முதலானோர் உடலைத் தாழியிற் கவித்தல் மரபு.[4] நாள்தோறும் அரசனைக் காலையில் துயில் எழுப்பல் பாடகர் தொழிலாகும்.[5] பாம்பின் சட்டை போன்ற மெல்லிய ஆடைகள் அக்காலத்தில் தமிழ் நாட்டிற் செய்யப்பட்டன.[6] கிள்ளிவளவன் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்திருந்த சேரன் இமயமலை மீது வில்பொறி பொறித்திருந்தான்?[7] இச்செய்தி நன்கு கவனித்தற்கு உரியது. இச்சேரன் யாவன்? இவன் காலம் யாது? என்பன ஆராய்தற்குரிய செய்திகள். இவை பொய்யான செய்திகளாக இருத்தல் இயலாது. என்னை? சோழனைப் பாராட்டிப் பாடும் புலவர், சேரனைப் பற்றிய பொய்ச் செய்தியைச் சோழன் முன்கூறத் துணியார் ஆதலின் என்க. புறவிற்காகத் துலைபுக்க சோழன், தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் என்பவர் கிள்ளிவளவன் முன்னோர்; முன்னவன் அருளுடைமைக்கும் பின்னவன் பெரு வீரத்திற்கும் சுட்டப் பெற்றனர்.


10. கோப்பெருஞ் சோழன்

முன்னுரை: இவன் உறையூரைக் கோநகராகக் கொண்டு சோணாட்டை ஆண்ட அரசன். இவன் நற்குணங்கட்கு இருப்பிடமானவன்; சிறந்த தமிழ்ப்புலவன்; அறத்தின் நுட்பங்களை உணர்ந்து அறவழி ஒழுகிய பெரியோன், பொத்தியார் என்றவரை அவைப் புலவராகக்


  1. புறம் 37.
  2. புறம் 34.
  3. புறம் 69,70.
  4. புறம் 228.
  5. புறம் 397.
  6. புறம் 39.
  7. புறம் 37,38,46.