பக்கம்:சோழர் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சோழர் வரலாறு



பிசிராந்தையின் அடியுறை எனக் கூறுக, அவன் உடனே நின் பேடை அணி யைத் தன் அணிகலம் தருவன்.”[1]

தந்தையும் மக்களும்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகட்கு மாறாக அவன் மக்கள் தீய இயல்புகளைப் பெற்றிருந்தனர். அவர்கள் தந்தையாண்ட பேரரசின் சில பகுதிகளை ஆண்டுவந்தனர்(?). அவர்கள் தந்தைக்குக் கீழ்ப்படியவில்லையோ அல்லது தந்தையை வென்று தாமே முழு நாட்டையும் ஆள விழைந்தனரோ அறியோம். கோப்பெருஞ் சோழன் பெரும் படையுடன் தன் மக்கள் மீது போர் புரியச் சென்றான்.

அந்நிகழ்ச்சியைக் கண்ட அவைப் புலவராகிய புல்லாற்றுார் எயிற்றியனார் என்ற புலவர் பெருமான் அரசனை நல்வழிப்படுத்த விழைந்தார். அவர் கோப்பெருஞ்சோழனை நோக்கி,

“பகைவரை வெல்ல வல்ல வேந்தே, பேரரசனாகிய கிள்ளியே, நின்னுடன் போர் செய்ய வந்தவர் நின்பகைவர் அல்லர், நீ உலகை வெறுத்துத் தேவர் உலகம் எய்த பின்னர் இவ்வரசாட்சிக்கு உரியவர் அவரே யாவர். இதனை நீ வென்ற பின்னர் இந்நாட்டை யாருக்கு அளிப்பை? நீ போரில் தோற்ற பின், நின் பகைவர் இழக்கத்தக்க பழியை உலகில் நிறுத்தியவன் ஆவாய்! ஆதலின், நினது மறன் ஒழிவதாக விண்ணோர் விருப்புடன் நின்னை விருந்தாக எதிர்கொள்ள நல்வினை செய்தல் நல்லது அதற்கு விரைந்து எழுக நின் உள்ளம் வாழ்வதாக”[2]

என்று உருக்கமாக உரைத்தார்.

அரசன் வடக்கிருத்தல்: கோப்பெருஞ் சோழன் நல்லியல்புகள் மிக்கவன்; ஆதலின், அவனது கோபம், புலவர் அறிவுரை கேட்டபின், இருந்த இடம் தெரியாது ஒழிந்தது. அவன் தன் அரசைத் தன் மக்களிடம் ஒப்புவித்து, அவரால் தனக்கு நேர்ந்த பழியை நினைத்து


  1. புறம், 67.
  2. புறம், 213.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/90&oldid=1234327" இலிருந்து மீள்விக்கப்பட்டது