பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மடலுக்கு ஒரு விடை

என்றன் மடற்குநீ எத்தனை சின்னஞ் சிறிய விடையினைத் தந்துளாய்! குறிப்பேட் டிருந்து கிழித்த சிறிய தாளையும் நிரப்பினாய் இல்லை! உலகில், அனைத்தையும் ஒளியில் மகிழ்வில் வலம்வரச் செய்யும் நலம்கிளர் நெஞ்சின் காதற் சொற்கள் நீஅறிந் திலையோ? உண்மையில் தட்ப வெப்பம் பற்றி எழுதலாம். சொற்கள் வேறெதும் சொல்லி இருக்கலாம். ஒருவர்க் கொருவர் உரைத்திடச் செய்தி இல்லையேல் மற்றவர் என்ன என்னவோ எழுதுவ துண்டே எழுதி யிருக்கலாம். இலையுதிர் காலப் பொலிவினைப் பற்றியும்; குடிசைக் கருகில் நெடிது உயர்ந்தஇரு மாதித ழாய்மலர் வாதுமை பற்றியும்; ஈரவான் பறக்கும் நாரைகள் பற்றியும் அழகோ வியங்களை எழுதினால் என்ன? யார்வந் திருந்து உன் வாயிலைத் தட்டினும் மடலினை எழுதி முடிக்கும் வரையில் கதவைத் திறவாது இருக்கலாம். உருளைக் கிழங்கு பானையில் இன்னும் கொஞ்ச நேரம் வெந்தால்தான் என்னவாம்? பூனை, நூல்உருண் டையை இழுத்துச் சிக்கல் பற்பல செய்தால் என்னவாம்? குறிப்பேட் டிருந்து கிழித்தெ டுத்த ஒருசிறு பக்கமும் நிரம்பிட வில்லையே. உனக்கு மட்டும் நான்மடல் எழுதினால் எண்ணிய தெல்லாம் எழுதி முடிக்க இடமே போதாது. ஆதலால் அஞ்சல் தலையின் அடியிலும், மறைவாய்க் கொஞ்சல் முத்தம் கொடுத்துமுடிப் பேனே.

205