பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

கிரிகோல் அபாஷிட்சே ஜியார்சியா

(பி. 1913)

தாய் நாடு

அன்புமிகும் என்நாடே, அமிழ்தே, என்றும் அணையாத பெருவிளக்காய் உனைக்காண் கின்றேன் உன்பெருமை வாழ்வினுக்கோர் முடிவே இல்லை, ஊற்றானாய் என்வாழ்வின் மகிழ்ச்சிக் கெல்லாம். என்இனிய கொடிமுந்திரித் தோட்டம் நீயே; என்றென்றும் உனைப்பேணி வளர்க்கின் றேனே.

தென்பாங்கை இசைக்கும் நின் ஆறு கட்கும், திருக்கிளரும் மலைகட்கும் நெகிழு கின்றேன். அன்னவைதாம் நான்பாடும் உணர்வுப் பாடல் அத்தனைக்கும் அடிமுடியாய் உயிர்ப்பாய் நிற்கும். என்பாட்டின் அடிகள்தொறும் நீயே அன்றோ! எழுகின்ற பேருணர்வும் நீயே அன்றோ! -

மறையாத ஞாயிறென ஒளிர்கின் றாய்நீ, மடங்காத எழுச்சியும் நீ! மண்ணில் போற்றும் குறையாத பெருவண்மை நெஞ்ச மும் நீ! கொழிக்கும்.அழ கோடுபல நாடுண் டேனும் நிறைவாக என்நெஞ்சில் நிற்ப தற்கு நின்னைப்போல் ஒருநாடும் இல்லை என்பேன்.